வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்றிய ஆறு பேரின் பெயர்களை வெளியிடாமல் இருந்தால் அது அந்த ஆண்டின் தேர்வை எழுதிய மற்றவர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டின் வழக்கறிஞர் தேர்வை எழுதியோரில் ஆறு பேர் ஏமாற்றினர். முதலில் அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. அதற்குப் பிறகு அந்த உத்தரவை மீட்டுக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றத்திடம் கூறியதற்கான காரணத்தைக் கேட்டபோது அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் விளக்கம் அளித்தது.
சம்பந்தப்பட்ட ஆறு பேரும் பிற்காலத்தில் பாரபட்சத்துடன் நடத்தப்படாமல் இருக்க அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று நீதிபதி சூ ஹான் தெக் முதலில் உத்தரவிட்டார். அந்த தனிப்பட்ட விவரங்களைக் காக்க, அவர்களின் ஆவணங்கள் உள்ள கோப்புகளை அதிகாரபூர்வமாக மூடிவைக்குமாறும் கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு தமது முடிவை மாற்றிக்கொண்ட நீதிபதி சூ, தேர்வில் ஏமாற்றியோரின் பெயர்களை நேற்று வெளியிட்டார்.
திருவாட்டி மோனிஷா தேவராஜ், திரு குஷல் அத்துல், திரு ஸ்ரீராம் ரவீந்திரன், திரு மேத்தியூ சோவ், திரு லயனல் சூங் யூங், திருவாட்டி லின் குவெக் யீ டிங் ஆகியோர் வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்றிய ஆறு பேர்.

