செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3d090436-15eb-4dbb-876a-bb8daca0d382
-

பூன் லே தாக்குதல்: குண்டர் கும்பல் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள்

பூன் லே டிரைவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்கள் மீது குண்டர் கும்பல் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின்கீழ் சந்தேகநபர்கள் ஒவ்வொருவர் மீதும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபரான 20 வயது முகம்மது சஜித் சலீம், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இம்மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு குண்டர் கும்பலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மற்றொரு சந்தேகநபரான 19 வயது ஆடவரும் அதே குண்டர் கும்பலில் 2016ஆண்டுக்கும் இம்மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் அவருக்கு 14 வயது. அதனால் அவரின் அடையாளத்தை வெளியிட உத்தரவு இல்லை.

சந்தேகநபர்கள் இருவரும் தற்போது தலா நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

முதலீட்டு நிபுணர்களைப்போல் நடிக்கும் ஏமாற்றுக்காரர்கள்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் 'ஜிஐசி' முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களைப்போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புதியவகை மோசடிச் செயல் குறித்து காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த மோசடியில் 'ஜிஐசி' நிறுவனத்திற்குச் சொந்தமானதுபோல் தோன்றும் 'டெலிகிராம்' குறுந்தகவல் செயலியின் குழுவில் சேர்ந்துகொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு வரும். அந்தக் குழுவை நடத்துவோர் தாங்கள் 'ஜிஐசி' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகத் தொகையை ஈட்டக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைத் தாங்கள் வழங்குவதாகவும் சொல்வர். மக்களை நம்பவைக்க ஏமாற்றுக்காரர்கள் 'ஜிஐசி' நிறுவனத்தின் சின்னத்தைப் பயன்படுத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் பொதுமக்களுக்கு முதலீட்டு சேவைகளை வழங்குவதில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மாணவரிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் பணிநீக்கம்

மாணவரிடம் தவறாக நடந்துகொண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் ஈத்தன் பட்டர்மன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் உள்பட கடந்த ஈராண்டுகளில் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக தேசிய பல்கலைக்கழகம் நான்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

இதற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டோரில் ஒருவரும் அரசியல் அறிவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஆவார்.

பேராசிரியர் பட்டர்மன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் பள்ளியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.