சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் தட்சிணாமூர்த்தி காத்தையா தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒத்திவைக்க அளித்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அவருடைய மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படவிருந்தது.
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிராக தாம் அளித்த சிவில் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை தம்முடைய மரண தண்டனை நிறுத்திவைக்குமாறு அவர் மனு கொடுத்திருந்தார்.
சிறை கைதிகளுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட தனிப்பட்ட கடிதங்களைச் சிறை அதிகாரிகள் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திற்கு அனப்பியதை எதிர்த்து தட்சிணாமூர்த்தி மனு அளித்துள்ளார்.
44.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் 36 வயது தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டார். தண்டனையை எதிர்த்து அவர் 2016ஆம் ஆண்டு அளித்த மேல்முறையீட்டில் அவர் தோல்வியடைந்தார்.

