அரை மில்லியனுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் சிறுவர்களும் இளையர்களும் தங்கள் எடுசேவ் அல்லது உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்குகளில் 200 வெள்ளி தொகையை அடுத்த மாதம் பெறுவார்கள்.
ஏழு வயதுக்கும் இருபது வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 540,000 பேருக்கு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று நிதி அமைச்சும் கல்வி அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதோடு பிள்ளைகளின் எடுசேவ் கணக்குகளில் அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் செலுத்தும் தொகையைத் தவிர்த்து தனியாக இத்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிக் கட்டணங்கள், செறிவூட்டல் வகுப்புகள், மின்னிலக்கக் கற்றலுக்காகக் கணினி வாங்குவது போன்ற செலவுகளுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிள்ளைகளின் கணக்குகளில் நேரடியாக இத்தொகை செலுத்தப்படும் என்றும் அதனைப் பெற அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


