வலுவிழந்து இருக்ககூடிய ஒருவரின் உடலை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் தானியக்கக் கருவி. நாள்பட்ட நோய்களை மேலும் நன்றாகக் கண்காணிக்க உதவும் செயலி.
மருத்துவமனைக்குச் செல்லும் அவசியமின்றி சிங்கப்பூரர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இத்தகைய புதிய உத்திகள் ஆராயப்பட்டு வருகின்றன அல்லது அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மக்கள்தொகைக்கான சுகாதார ஆய்வை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் இத்தகைய முயற்சிகளுக்கு 90 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மக்கள்தொகையை அடைய அடித்தளத்தை உருவாக்க இது உதவும்.
சென்ற மாதம் சுகாதார அமைச்சு 'ஹெல்தியர் எஸ்ஜி' எனும் திட்டத்தை அறிவித்தது. பிற்காலத்தில் நோய்வாய்ப்படாமல் இருக்க முன்னரே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்குமாறு மக்களை ஊக்குவிப்பது அதன் நோக்கம்.
அதைத் தொடர்ந்து புதிய சுகாதார உத்திகள் ஆராயப்பட்டு வருகின்றன.
சமூக அளவில் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய புதிய தீர்வுகளை ஆராய்ந்துவரும் சிங்ஹெல்த் குழுமம், மக்கள்தொகை சுகாதார ஆய்வு நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
முதன்முறையாக நடைபெற்ற 'சிங்கப்பூர் பாப்புலேஷன் ஹெல்த் சிம்போசியம் 2022' எனும் சிங்கப்பூர் மக்கள்தொகை சுகாதாரக் கருத்தரங்கில் அந்நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.
'சிங்ெஹல்த் சென்டர் ஃபார் பாப்புலேஷன் ஹெல்த் ரிசர்ச் அண்ட் இம்பிளிமேன்டேஷன்' என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நிலையத்தை மெய்நிகராகத் திறந்துவைத்தார்.
ஆய்வு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைப்பு 2025 திட்டத்தின்கீழ் 90 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மானியத்தை சுகாதார அமைச்சு தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஹெல்தியர் எஸ்ஜி வழிமுறையின் ஓர் அங்கமாக இந்தப் புதிய மானியத்தின் மூலம் புத்தாக்க அம்சங்களைக் கொண்ட மக்கள்தொகை சுகாதார ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களை நாங்கள் சென்றடைய எண்ணம் கொண்டுள்ளோம். சுகாதாரம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோய் வராமல் தடுப்பதன் தொடர்பிலான சேவைகளை வழங்குவது ஆகியவற்றைப் பழக்கப்பட்ட முறைகளில் மேற்கொள்வதற்கு அப்பால் எடுக்கப்படக்கூடிய முயற்சிகளில் ஆய்வுகள் கவனம் செலுத்தும்," என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

