உக்ரேன் நிலவரத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பொதுவாக உற்பத்தித் துறை நிறுவனங்கள் வருங்காலத்துக்கான வர்த்தகம் சார்ந்த எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டுள்ளன.
உற்பத்தித் துறையில் இரண்டு விழுக்காட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு முதல் காலாண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகம் செய்வதற்கான சூழல் மேம்பட்டிருக்கும் என்று கருதுகின்றன. பொருளியல் வளர்ச்சிக் கழகம், 'சிங்ஸ்டேட்' எனப்படும் சிங்கப்பூர் புள்ளி விவரப் பிரிவு ஆகிய இரு அமைப்புகளும் நடத்திய கருத்தாய்வுகளின் ஒன்றிணைக்கப்பட்ட முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் இந்த விகிதம் எட்டாகப் பதிவானது.
உக்ரேன் போரால் உற்பத்தி நிறுவனங்களுக்கான செயல்பாட்டுச் செலவு கூடியுள்ளது. இத்தகைய காரணங்களால் உற்பத்தி நிறுவனங்களுக்கிடையே நம்பிக்கை குறைந்துள்ளது.
எனினும், கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததைத் தொடர்ந்து சேவைத் துறையில் நிறுவனங்களுக்கிடையே நம்பிக்கை கூடியிருந்தது.
அடுத்த ஆறு மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று 15 விழுக்காட்டு சேவைத் துறை நிறுவனங்கள் நம்புகின்றன. முந்தைய கருத்தாய்வில் பதிவான 14 விழுக்காட்டைக் காட்டிலும் இது சற்று அதிகம்.
கடந்த மார்ச் மாதத்துக்கும் இந்த மாத நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கருத்தாய்வு நடத்தப்பட்டதாகப் புள்ளி விவரப் பிரிவு தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் அரசாங்கம் பல பயணக் கட்டுப்பாடுகளையும் உள்ளூர் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளையும் பெரிய அளவில் தளர்த்தியது.
உற்பத்தித் துறையில் போக்குவரத்துப் பொறியியல் நிறுவனங்கள்தான் ஆக அதிக நம்பிக்கையைக் கொண்டிருப்பது தெரியவந்தது. 33 விழுக்காட்டுப் போக்குவரத்துப் பொறியியல் நிறுவனங்கள் வர்த்தகச் சூழல் மேம்பட்டிருக்கும் என்று நம்புகின்றன.
ரஷ்ய-உக்ரேன் பூசலால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. ஆகையால் அதன் தொடர்பிலான நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்று கடல்துறை, கடலோரப் பொறியியல் துறையில் உள்ள நிறுவனங்கள் கருதுகின்றன.

