ஏழிலிருந்து 20 வயதுக்கு உள்பட்ட சுமார் 540,000 சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரின் 'எடுசேவ்' அல்லது 'பிஎஸ்இஏ' எனப்படும் உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்கிலும் இவ்வாண்டு 200 வெள்ளி நிரப்பப்படும். இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தத் தொகை அடுத்த மாதம் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சும் நிதி அமைச்சும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி சார்ந்த செலவுக்குக் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது இலக்கு என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தொகை ஒருமுறை மட்டும் நிரப்பப்படும்.
560 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டம், வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவ வரையப்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்துக் கடைகள், உணவங்காடிகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகளை வழங்குவது, பிள்ளைகளின் கல்விக் கணக்கில் பணம் நிரப்புவது உள்ளிட்ட முயற்சிகள் அதில் அடங்கும்.
'எடுசேவ்', உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்குகளில் உள்ள தொகையை சில கட்டணங்களைச் செலுத்தவும் சில பாடத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். பள்ளிகள் ஏற்பாடு செய்யும் இணைப்பாட வகுப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மிலெனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் சில செலவுகளுக்கு 'எடுசேவ்' தொகையை உபயோகிக்கலாம்.

