6,000 டெங்கி தொற்றுச் சம்பவங்கள்
இவ்வாண்டு இதுவரை மட்டும் 6,000க்கும் அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு முழுவதும் பதிவானதைவிட அதிகம்.
சென்ற ஆண்டு மொத்தம் 5,258 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. சென்ற வாரம் மட்டும் 941 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. கடந்த சுமார் ஈராண்டுகளில் சென்ற வாரம்தான் ஆக அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
ஆண்டுதோறும் பொதுவாக ஜூன் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகும். இவ்வாண்டு அதற்கு முன்னரே அதிகமான சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.
புதிய ஓமிக்ரான் வகை
கிருமித்தொற்றுக்கு ஆளான இருவர்
'பிஏ.2' ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமியின் குடும்பத்தைச் சேர்ந்த 'பிஏ.2.12.1' கிருமித்தொற்றுக்கு சிங்கப்பூரில் இருவர் ஆளாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானதும் அவ்விருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
'பிஏ.2.12.1' வகை ஓமிக்ரான் கிருமியை உலகச் சுகாதார நிறுவனம் தற்போது கவலை தரும் கிருமியாகவோ கண்காணிக்கப்படவேண்டிய ஒன்றாகவோ வகைப்படுத்தவில்லை. இது உள்ளிட்ட புதிய ஓமிக்ரான் கிருமி வகைகள் ஒருவர் மோசமாக நோய்வாய்ப்படும் சாத்தியத்தை அதிகரிப்பதுபோல் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேலைச் சுமை குறைய ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை நாடலாம்'
சிறுவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உதவ புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். 'ரிசோட்ஸ் வோர்ல்டு' மாநாட்டு நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கல்வி அமைச்சின் பதவி உயர்வு, நியமன நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய தொடக்க உரையில் திரு சான் அதனைக் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்ப முறைகள் போன்றவற்றின் வாயிலாக ஒரே நேரத்தில் பலரைக் கவனித்துகொள்ளமுடியும் என்றும் அதனால் வளங்கள், நேரம் உள்ளிட்டவை மிச்சமாகும் என்றும் அவர் சொன்னார். அதன் மூலம் கூடுதல் தேவைகள் உள்ள மாணவர்களிடம் கவனம் செலுத்தமுடியும் என்று திரு சான் கூறினார்.
சிறுவர் புத்தக எழுத்தாளர்களுக்கு 800,000 வெள்ளி நிதி
பிள்ளைகளுக்கு மொழியை நன்கு கற்றுக்கொள்ள உதவும் படங்கள் உள்ள புத்தகங்களை எழுத விழையும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் 800,000 வெள்ளி மதிப்புள்ள நிதியிலிருந்து உதவிபெற்றுக்கொள்ளலாம். இருமொழிக் கொள்கைக்கான லீ குவான் இயூ நிதியின்கீழ் அந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் மட்டுமின்றி 'கன்டென்ட் கிரியேட்டர்ஸ்' எனும் நவீனப் படைப்பாளர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். நிதியுதவி பெற விரும்புவோர் தாங்கள் எழுதவிருக்கும் புத்தகங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். புத்தகங்கள் சிங்கப்பூர் சூழலை மையமாகக் கொண்டிருக்கவேண்டும், மூன்றிலிருந்து ஐந்து பாகங்களாக இருக்கவேண்டும்.

