ஏறத்தாழ 2.4 மில்லியன் என்டியுசி உறுப்பினர்களும் என்டியுசி லிங்க் உறுப்பினர்களும் கோப்பித்தியாம் உணவுநிலையங்களிலும் கோப்பித்தியாம் காப்பிக்கடைகளிலும் உணவு, பானம் ஆகியவற்றை வாங்கும்போது 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
மே தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சலுகை இவ்வாண்டு இறுதிக்குள் நடப்புக்கு வரும் என்று என்டியுசி நேற்று அறிவித்தது.
ஐந்து விழுக்காடு ரொக்கம், ஐந்து விழுக்காடு லிங்க் புள்ளிகள் வடிவில் உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கப்படும்.
இந்தச் சலுகை 46 கோப்பித்தியாம் உணவு நிலையங்களில் உள்ள அனைத்துக் கடைகளிலும் 80 கோப்பித்தியாம் காப்பிக்கடைகளில் உள்ள பானக் கடைகளிலும் வழங்கப்படும்.
சலுகையைப் பெற என்டியுசி ஃபேர்பிரைஸ் செயலியைப் பயன்
படுத்தி உறுப்பினர்கள் பணம் செலுத்த வேண்டும்.
அதிகரித்து வரும் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஊழியர்களுக்கு நிவாரணம் தர இந்தத் திட்டம் இலக்கு
கொண்டுள்ளது.
"உதவி தேவைப்படும் நேரத்தில் ஆதரவு வழங்கவும் அன்றாட அத்தியாவசியப் பொருள்களில் விலைக்கு அளவுகோல் அமைக்கவும் ஃபேர்பிரைஸ் குழுமம் மூலம் நாங்கள் எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம்," என்று என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்தார்.
எரிபொருள், உணவு, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார்.
இந்த விலைவாசி ஏற்றத்தால் வர்த்தகங்களும் பயனீட்டாளர்களும் பாதிப்படைந்திருப்பதாக திரு இங் கூறினார்.
புதிய 10 விழுக்காடு திட்டம் ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியிலும் பொங்கோலில் உள்ள நார்த்ஷோர் பிளாசா கடைத்தொகுதியிலும் ஏற்கெனவே நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாண்டு இறுதிக்குள் மற்ற கோப்பித்தியாம் கடைகளில் இத்திட்டம் படிப்படியாக அறிமுகப்
படுத்தப்படும்.

