சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியரான 36 வயது தட்சிணாமூர்த்தி கந்தையாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று தூக்கிலிடப்பட இருந்த தட்சிணாமூர்த்தி, தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தட்சிணாமூர்த்தியுடன் வேறு சில மரண தண்டனை கைதிகளும் தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு முடியும்வரை தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒத்திவைக்க தட்சிணாமூர்த்தி விடுத்த கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றது. தட்சிணாமூர்த்தியின் இந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்ய தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
தாங்கள் எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் சட்டவிரோதமான முறையில் நகல் எடுக்கப்பட்டு தலைமைச் சட்ட அதிகாரிக்கு அனுப்பப்படுவதாக 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தட்சிணாமூர்த்தி நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அந்த நகல்களை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது சட்டத்துக்குப் புறம்பான அணுகுமுறை கையாளப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தங்கள் மரண தண்டனையை ஒத்திவைக்கும்படி அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் தட்சிணாமூர்த்தி யும் மற்றொரு சிறைக் கைதியான கோபி அவிடியனும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களது கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கைதிகளின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவின்றி கைதி
களின் தனிப்பட்ட கடிதங்களைச் சிறை அதிகாரிகள் நகல் எடுத்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் தட்சிணாமூர்த்தி, கோபி ஆகியோரின் கடிதங்கள் தொடர்பில் அதிகாரிகள் தவறான முறையில் நடந்துகொண்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தியும் 12 சிறைக் கைதிகளும் தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் சிங்கப்பூர் சிறைத் துறையும் சட்டவிரோதமான முறையில் நடந்துகொண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கைதிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதற்கும் பதிப்புரிமை மீறலுக்கும் இழப்பு கோரப்பட்டது.
இந்த விண்ணப்பம் மூன்று மாதம் கழித்து மீட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கான செலவை ($10,000) கைதிகளின் அப்போதைய வழக்கறிஞர் எம். ரவி ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

