செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
1f468b01-e827-48fa-9027-01f689ee6f67
-

முதியவர் கொலை: சந்தேகத்தின் பேரில் பணிப்பெண் கைது

முதியவர் ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 49 வயது வெளிநாட்டுப் பணிப்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த 73 வயது முதியவரின் மரணம் குறித்து நேற்று முன்தினம் இரவு 8.50 மணி அளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீஷான் ஸ்திரீட் 23ல் உள்ள ஒரு வீட்டில் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அவ்வீட்டிற்குள் சென்றபோது அந்த முதியவர் அசைவற்றுக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார். முதியவரின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

கைது செய்யப்பட்ட பணிப்பெண் மரணமடைந்த முதியவரின் வீட்டில் பணிபுரிபவர். அவர் மீது இன்று கொலைக் குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆள்மாறாட்ட மோசடி:

15 வயது சிறுவனிடம் விசாரணை

சீனாவைச் சேர்ந்த அதிகாரியாக பாசாங்கு செய்து நடத்தப்பட்ட மோசடிக் குற்றத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 வயது ஆடவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 21 வயது ஆடவர் ஒருவர் காணாமல்போய்விட்டதாக காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டதை அடுத்து, அவரைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

கடந்த புதன்கிழமையன்று அவர் ஏர்போர்ட் பொலிவார்ட்டில் பத்திரமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்துக்காக சீனக் காவல்துறையினர் தம்மை கைது செய்யத் தயாராக இருப்பதாக தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர் தெரிவித்ததாக அந்த ஆடவர் கூறினார்.

மேலும் சீனாவில் உள்ள தமது குடும்பத்தார், நண்பர்களுடன் தொடர்புகொள்ள வேண்டாம் என்று தமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அந்த ஆடவரைக் கடத்திவிட்டதாகவும் பிணைத் தொகை கொடுத்தால் மட்டுமே அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அவரது பெற்றோரை மோசடிக்காரர்கள் மிரட்டினர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்; இருவர் கைது

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 4,500 பொட்டலங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

$500,000க்கும் அதிகமான வரி செலுத்தப்படாமல் இந்த சிகரெட்டுகள் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டதாக சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.

கடந்த புதன்கிழமையன்று தோ பாயோ லோரோங் 8ல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருவர் லாரியிலிருந்து காருக்குள் பெட்டிகளை மாற்றுவதை அதிகாரிகள் கவனித்தனர்.

சோதனை நடத்தச் சென்றபோது அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக்காரர்களுக்கு உதவியதாக 63 வயது பெண் மீது குற்றச்சாட்டு

இணையம் மூலம் காதல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு 63 வயது பெண் ஒருவர் உதவியதாகக் கூறப்படுகிறது. மோசடிக்காரர்கள் பயன்படுத்துவதற்காக அவர் இரண்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. வங்கிகளை ஏமாற்ற அப்பெண் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மோசடி வலையில் விழுந்த மூவரிடமிருந்து பறிக்கப்பட்ட $121,000 பணம், அந்த வங்கிக் கணக்குகளில் போடப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

2015 ஆய்வுக்கூடம் வெடிப்பு:

முன்னாள் இயக்குநருக்கு அபராதம்

கடந்த 2015ஆம் ஆண்டு லீடன் நேஷனல் ஆக்சிஜன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த வெடிப்பில் வேதியியலாளர் மாண்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய தவறியதற்காக அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான 64 வயது கேரி சூ பு சாங்கிற்கு $45,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.