மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை பிரதமர் லீ சியன் லூங் ஆதரித்துள்ளார் என்ற பொய்ச் செய்திகள் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய செய்திக் கட்டுரைகளில் இடம்பெறும் முதலீட்டுத் திட்டங்கள் பாதுகாப்பானவை என்றும் அதிக லாபம் தரக்கூடியவை என்றும் காட்டப்படுவதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.
"இணையத்தில் வெளியிடப்படும் இவை பொதுவாக செய்திக் கட்டுரைகளின் வடிவில் உள்ள கட்டணம் பெறப்பட்ட விளம்பரங்கள்," என்று காவல்துறை சொன்னது.
ஒருவர் இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் இணையமுகவரிக்குச் செல்லும்போது அவர் மின்னிலக்க நாணய முதலீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை வழங்கும் இணையத்தளத்திற்குக் கொண்டுசெல்லப்படுவார்.
அந்த இணையத்தளத்தில் தங்களின் தொடர்பு விவரங்களைத் தெரிவிப்போரை, சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களை நிர்வகிப்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் தொடர்புகொள்வார்.
போலியான, தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் இத்தகைய விளம்பரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடன் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

