அணில் கேமரா உள்பட நீடித்த நிலைத்தன்மை பரிந்துரைகள்

அணில் கேமரா உள்பட நீடித்த நிலைத்தன்மை பரிந்துரைகள்

2 mins read
6ce013e7-20fe-48ad-9b25-73331abdf583
'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்' தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் நடைபெற்ற பசுமை நடவடிக்கை பயிலரங்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிடோக்­கில் பனை மரங்­கள் வரி­சை­யாக உள்ள ஒரு பகு­தி­யில் வாழும் சுமார் 20 அணில்­களை 24 மணி நேரத்­துக்­கும் நேர­லை­யில் காண்­பிப்­பது. அத்­து­டன், அணில்­கள் குறித்த தக­வல்­க­ளை­யும் அதில் இணைப்­பது; என்ன செய்­ய­லாம், செய்­யக் கூ­டாது போன்ற விளக்கங்களுடன் குறிப்­பு­களை அதில் வழங்­க­லாம்.

இத்­த­கைய பரிந்­து­ரை­க­ளைப் பயி­ல­ரங்கு ஒன்­றில் பங்­கேற்­பா­ளர்­கள் முன்­வைத்­த­னர். தேசிய அள­வில் பசுமை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் நீடித்த நிலைத்­தன்மையைக் கடைப்­பி­டித்து செயல்படவும் சிங்கப்பூரில் ஊக்­கு­விக்­கப்­பட்டு வரு­கிறது. அதை­யொட்டி இந்­தப் பயி­ல­ரங்கு நடத்தப்­பட்­டது.

'கிரீன் ஆக்­‌ஷன் ஃபோர் கம்­யூ­னிட்­டீஸ்' எனப்­படும் 'சமூ­கங்­களுக்­கான பசுமை நட­வ­டிக்கைகள்' எனும் இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பயி­ல­ரங்கு இடம்­பெற்­றது. சமூ­கத்­தில் உள்­ள­வர்­களை ஒன்­று­கூ­டச் செய்து நீடித்த நிலைத்­தன்மை முயற்­சி­க­ளைத் திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்த வைப்­பதே இந்த இயக்­கத்­தின் நோக்­கம் என்று 'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்' தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக நிலை­யத்­தில் நடைபெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­னார்.

"சமூ­கத்­தில் இருக்­கும் கற்­பனை வளம், துடிப்பு, திறன்­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும்­போது சாத்­தி­ய­மா­கக்­கூ­டிய செயல்­களுக்கு அளவே இருக்­காது. குறிப்­பாக நீடித்த நிலைத்­தன்மை போன்ற விவ­கா­ரங்­க­ளுக்கு இது பொருந்­தும். இந்த அம்சத்தின் தொடர்­பில் பலர் அக்­கறை கொண்­டி­ருப்­ப­துடன் நட­வ­டிக்­கை­யில் இறங்­க­வும் தயா­ராய் இருக்­கின்­ற­னர்," என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

தென்­கி­ழக்கு வட்­டா­ரத்­தின் அடித்­த­ளத் தலை­வர்­கள் உள்­பட 70 சமூ­கத்­தி­னர் நேற்­றைய பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்­ட­னர். தாங்­கள் இருக்­கும் பகு­திக்கு உகந்த நீடித்த நிலைத்­தன்மை கட்­ட­மைப்­பைத் திட்­ட­மிட்டு செயல்படுத்தும் முயற்­சி­யில் அவர்­கள் ஈடு­பட்­ட­னர்.

தேசிய வளர்ச்சி, தொடர்பு, தகவல் ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ், தென்கிழக்கு வட்டார மேயர் ஃபாமி அலிமான் ஆகியோர் பயிலரங்கை வழிநடத்தினர்.