செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8791c3a0-de9f-4f5d-9ae3-cba7f3be47e9
-

பிரதமர் லீயின் மே தின உரை

பிரதமர் லீ சியன் லூங் இன்று காலை 9.50 மணிக்குத் தமது மே தின உரையை ஆற்றுவார். திரு லீயின் மே தின உரை அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

இந்தோனீசியப் பணிப்பெண் மீது

கொலைக் குற்றச்சாட்டு

பிஷானில் 73 வயது ஆடவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் இந்தோனீசியாவைச் சேர்ந்த பணிப்பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கும் இரவு 8.45 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் 49 வயது சுமியாத்தி திரு லோ ஹூன் சியோங்கைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டது.

பிஷான் ஸ்திரீட் 23ல் உள்ள வீவக புளோக் 222ல் ஆடவர் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மாண்டவரின் வீட்டில் சந்தேகநபரான சுமியாத்தி வேலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறை கூறியது. சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்குக் காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

தீயணைப்பு நிலையங்கள் மீண்டும் பொதுமக்களுக்குத் திறப்பு

கொவிட்-19 சூழலால் ஈராண்டுகளாகப் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்த தீயணைப்பு நிலையங்கள் மீண்டும் வாரந்தோறும் திறக்கப்படும். முன்பிருந்ததைப்போல் தீயணைப்பு நிலையங்கள் சனிக்கிழமைதோறும் காலை வேளையில் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டு வருகின்றன.

இந்த ஏற்பாட்டின்கீழ் பார்வையாளர்கள் வழிகாட்டிகளின் உதவியுடன் தீயணைப்பபு நிலையங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

அவற்றின் மூலம் அவசர காலத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் எவ்வாறு இயங்குகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நேற்று பல குடும்பங்கள் தீவு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குத் தங்களின் பிள்ளைகளுடன் சென்று கண்டு களித்தனர்.

சனிக்கிழமைகளில் காலை ஒன்பது மணியளவில் தீயணைப்பு நிலையங்கள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். அதற்கு முன்னதாகவே நேற்று பல நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று சுமார் 6,000 பேர் தீயணைப்பு நிலையங்களைக் காணத் திரண்டனர்.