சிங்கப்பூர், மலேசியா ஆகிய இருநாடுகளின் காவல்துறையினரும் இணைந்து காதல் மோசடிச் செயல்களை மேற்கொண்ட இரண்டு கும்பல்களைப் பிடித்துள்ளனர். இது, இருநாட்டுக் காவல்துறையினரும் இவ்வாண்டு இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள முதல் முறியடிப்பு நடவடிக்கை.
இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட காதல் மோசடிச் செயல்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இரு பெண்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு பெண்களுக்கும் 46 வயது. அவர்களில் ஒருவர் 15,000 வெள்ளியை இழந்தார். மற்றொருவர் 20,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
ஒரு பெண் இவ்வாண்டு மார்ச் மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார். மற்றொருவர் சென்ற மாதம் புகார் அளித்தார்.
ஏமாற்றுக்காரர்களைப் பிடிக்க சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு, மலேசியாவின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுடன் இணைந்து செயல்பட்டது. காதல் மோசடிச் செயல்களை மேற்கொண்ட ஏமாற்றுக்காரர்கள் மலேசியாவில் இயங்கியது தெரியவந்தது.
சென்ற மாதம் 22, 23ஆம் தேதிகளில் சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் இரண்டு அடுக்குமாடி வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆறு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானோர் 28லிருந்து 40 வயதுக்கு உள்பட்டவர்கள்.