தமிழ்மொழி விழா 2007ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறி வருகிறது. தினசரி வாழ்க்கையில் தமிழர்கள் தங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த விழா. கடந்த ஒரு மாத காலமாக இளையர்கள் சிலர் தங்களின் தமிழார்வம் குறித்து பகிர்ந்துகொண்டது தமிழ் முரசின் முதல் பக்கத்தில் இடம்பெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில இளையர்கள் தங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"நான் என் அன்புக்குரியவர்களிடம் மட்டுமே தமிழில் பேசுவேன். அவர்களுடன் என்னை உணர்வுபூர்வமாக இணைக்கும் சிறப்பு தமிழுக்கு உண்டு."
- செ.பவித்ரா, 27
நிர்வாகி
"தமிழில் பேச நான் விரும்புகிறேன். தமிழ்மொழியில் உரையாடும்போது அதில் எனக்கு ஒரு தெளிவும் புரிந்துணர்வும் கிடைக்கிறது."
- சாய் வினோத், 26
பல்கலைக்கழக மாணவர்
"நான் என் சகோதரர்களுடன் தமிழில் பேசுவேன். அதனால் எங்களின் உறவு மேலும் நெருக்கமான ஒன்றாக விளங்குகிறது."
- நஜ்லா ஸுலைஹா, 16
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி
தொகுப்பு:
கவின்விழி கதிரொளி,
ஆ.விஷ்ணு வர்தினி
படங்கள்:
கருத்து கூறியோர்
"நான் தினமும் தமிழில்தான் பேசுவேன். தமிழிசை, தமிழர் உணவு போன்றவையும் என் மனதிற்கு மிக நெருக்கமானவை."
- கிருத்திகா கிருஷ்ணன், 21
பல்கலைக்கழக மாணவர்
"தமிழ்மொழி நிகழ்ச்சிகளில் நான் ஆர்வத்துடன் பங்கேற்கிறேன். சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து நான் பங்களிப்பேன்."
- வ. பவித்திரா, 13
உயர்நிலைப்பள்ளி மாணவி
"என் தாய்மொழி தமிழ் இல்லை என்றாலும் பள்ளியிலிருந்து தமிழ்மொழியைக் கற்று வருகிறேன். அதில் பேசவே நான் அதிகம் விரும்புகிறேன்."
- அ.திரேசா, 28
செயல்பாட்டு நிபுணர்
"தமிழின் அழகையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் பாடல்களை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். அத்தகைய பாடல்கள் நம் மனதை உருக்குவதுடன் புத்துணர்ச்சியும் தருகின்றன."
- தேசியராணி, 27
பட்டதாரி
"தமிழ், கவிதை நயம் மிகுந்த ஒரு மொழி என்பதைப் பாடல்கள் கேட்டு ரசிக்கும்போது நான் உணர்கிறேன்."
- பிரியங்கா சிவபாலன், 25, கணக்கியல்,
வரி அதிகாரி
"என் உறவினர்கள், அண்டைவீட்டார் ஆகியோருடன் நான் தமிழில் பேசுவேன். தமிழில் பேசும்போது ஒருவித பிணைப்பு ஏற்படுகிறது."
- செல்வம் ஜெய சூர்யா, 19
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்
"குடும்பத்தாருடன் தமிழில் பேசுவது எனக்கு மனநிறைவு தரும் ஒன்று. தமிழ் புத்தகங்களை வாசிப்பதால் என் மொழி வளமும் பெருகுகிறது."
- ப.பிரியாதர்ஷினி, 21
பாலர் பள்ளி ஆசிரியர்
"நான் செல்லும் கடைகளில் காசாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை 'அண்ணா' என்று அழைப்பேன். அவர்கள் என்னுடன் நட்புடன் பேசுவார்கள்."
- பர்திநாத மூர்த்தி, 19
உயர் நைடெக் மாணவர்
தமிழ் மட்டும் அறிந்த முதியவர்களிடம் அவர்கள் உடல்நிலை குறித்து நான் தமிழில் விளக்கும்போது அவர்கள் ஒருவித நிம்மதி அடைகின்றனர். தன்னைப் புரிந்துகொள்ளவும் சங்கடங்களைப் பகிர்ந்து கொள்ளவும் 'நான் இருக்கிறேன்' என்ற உணர்வை தமிழ் அவர்களுக்கு அளிக்கிறது."- பிரதீபா சிவபாலன், 20
தாதி
"அந்நியமான இடங்களில் யாரேனும் தமிழில் பேசினால் அவர்களுடன் இனம்புரியாத ஒரு பந்தம் உள்ளதுபோல் நான் உணர்வேன்."
- மாயழகு குகன், 24
பல்கலைக்கழக மாணவர்
"தமிழ், வாழும் மொழியாக இருக்க நாம் அதைத் தினமும் பயன்படுத்த வேண்டும்."
- ரூபா அருள் செல்வி, 28 மாணவர் பராமரிப்பு
நிலைய மேற்பார்வையாளர்
"உறவினர்கள் ஒன்றுகூடும்போது ஆங்கிலத்தில் பேசுவர். நான் அப்போது தமிழில் உரையாடுவேன். பிறர் தமிழில் பேசுவதை நாமும் ஊக்குவிக்கலாம்."
- ரிஃபானா ஃபர்வின், 26 மாணவர் பராமரிப்பு ஆசிரியர்
"சமூக ஊடகங்களில் தமிழ்மொழிக் காணொளிகளை நான் விரும்பிப் பார்ப்பதுடன் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன்."
- சி.பவித்திராதேவி, 14 உயர்நிலைப்பள்ளி மாணவி

