கரையோரப் பூந்தோட்டத்தின் ஒரு பகுதியாக 2027ஆம் பே ஈஸ்ட் கார்டன் திறக்கப்பட்டதும் பார்வையாளர்களுக்கு அது ஒரு புதிய பசுஞ்சோலையாகக் காட்சியளிப்பதோடு நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய பூங்கா வடிவமைப்பையும் அது கொண்டிருக்கும்.
சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம் அமைந்துள்ள மரினா ஈஸ்ட்டில் இடம்பெற உள்ள புதிய பூங்கா, தற்போதைய 54 ஹெக்டர் 'பே சௌத் கார்டன்' பூங்காவின் பாதியளவைக் காட்டிலும் சற்று பெரியதாக இருக்கும். அதாவது, 'பே ஈஸ்ட் கார்டனி'ன் மொத்த பரப்
பளவு 34 ஹெக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பே சௌத் கார்டனில் 'சூப்பர்ட்ரீஸ்' எனப்படும் வண்ணவிளக்கு மரங்களும் குளுமை தரும் இயற்கைக் காப்பகங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆகக் குறைந்த எரிசக்தி பயன்பாட்டுக் கட்டடங்களைக் கொண்டிருப்பதற்காக கட்டட, கட்டுமான ஆணையம் வழங்கும் பிளாட்டின பச்சை முத்திரைச் சான்றிதழை புதிய பூங்கா பெறக்கூடியதாக இருக்கும்.
எரிசக்தியை மிச்சப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கடைப்பிடித்து, மேம்படுத்தப்பட்ட கட்டட வடிவமைப்புக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும், 2030 சிங்கப்பூர் பசுமைத் திட்டத்திற்கு ஏற்ற வகையில், பல்வேறு வடிவமைப்பு உத்திகளைக் கையாண்டு எரிசக்திக்கான தேவை இல்லாத வகையில் புதிய பூங்கா அமையும். தனக்குத் தேவையான எரிசக்தியைத் தானே உருவாக்கும் திறனை அது பெற்றிருக்கும்.
மேலும், பூங்காவின் பெரும்பாலான இடங்கள் இயற்கை வெளிச்சத்தைக் கொண்டிருக்கும்.
'பே ஈஸ்ட் கார்டன்' பெருந்திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட ஆய்வில் இருக்கிறது. சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் இதில் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை பெருந்திட்டக் குழு ஆராய்ந்து வருகிறது.
மேலும், மழைநீர் சேமிப்பு மூலம் பூங்காவுக்குத் தேவையான நீர்
வளத்தைப் பெருக்குவதும் பரிசீலனையில் இருக்கும் ஓர் அம்சம்.
தண்ணீரைச் சேமிக்கும் தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுத்தப்படலாம். மேலும், மறுபயனீடு மூலம் கழிவு மேலாண்மையை அறிவார்ந்த முறையில் செயல்படுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

