ராணுவம் அல்லாத பணிகளுக்குக்கூட பெண்களை தேசிய சேவையில் சேர்ப்பதற்கான சமூகச் செலவு, எந்த நன்மைகளையும்விட அதிகமாக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு, தற்காப்பு போன்ற மிக அத்தியாவசியத் தேவையாக இருந்தால் மட்டுமே கட்டாய தேசிய சேவையை நியாயப்படுத்த முடியும், வேறு எந்த காரணத்திற்காகவும் கட்டாயப்
படுத்துதல் நடைமுறைப்படுத்தப்பட்டால் 'குறிப்பிடத்தக்க ஆபத்துகள்' உள்ளன, அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி என்றார் அவர்.
சிங்கப்பூரில் பெண்கள் தேசிய சேவையாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அவர்கள் வேலைக்குச் செல்வது தள்ளிப்போகும் என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.
இதன் விளைவாக உள்ளூர் மனிதவளமும் குடும்பங்களின் ஊதியமும் குறையும் என்று அவர் கூறினார்.
"சுகாதாரப் பராமரிப்பு, சமூக சேவை போன்றவற்றை மேம்படுத்த ராணுவ அல்லாத பணிகளில் பெண்களை தேசிய சேவையாற்ற வைத்தால் மற்ற துறைகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
"நீண்டகால அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர், கணவன்மார்கள், பிள்ளைகள் ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் ஒட்டுமொத்த அடிப்படையில் சமுதாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும்," என்று டாக்டர் இங் கூறினார்.
சிங்கப்பூருக்கு எதிராக எதிரிப் படைகள் போர் தொடுத்தால் அவற்றை முறியடித்து நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்ட ராணுவ வீரர்களை உருவாக்குவதே தேசிய சேவையின் இலக்கு என்றார் அமைச்சர் இங்.
அதேபோல, உள்நாட்டுப் பாதுகாப்பு, அவசரச் சேவை ஆகியவற்றுக்கான தேவையைப் பொறுத்து காவல்துறையிலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிலும் ஆள்சேர்க்க வேண்டும்.
"பொதுமக்களில் ஒருவராக இருந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிப்பதை இரண்டு ஆண்டுகளுக்குப் பெண்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பதை நியாயப்
படுத்த முடியாது.
"பெண்களுக்குத் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும்
பட்சத்தில் அவர்கள் அந்த விதி
முறைக்கு உட்படாது போனால் அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும். இது தேவையற்ற ஒன்று," என்றார் டாக்டர் இங்.
மேலும், சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதைச் சுட்டிய அமைச்சர் இங், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் தொழில்நுட்பப் பயன்பாடு சிங்கப்பூர் ஆயுதப் படையை நவீனமயமாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
இதனால் சிங்கப்பூர் ஆயுதப் படை கூடுதல் வலிமையுடனும் துரிதமாகச் செயல்படக்கூடிய ஆற்றலுடனும் இருப்பதாக அவர் கூறினார்.

