முழுநேர தேசிய சேவையாளராக சேர இம்மாதம் 15ஆம் தேதி முதல் பதிவுசெய்வோர் தங்களது தேசிய பதிவு அடையாள அட்டையை (என்ஆர்ஐசி) சமர்ப்பிக்கத் தேவை இல்லை என்று தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
தற்போதைய நடைமுறையின்படி, முழுநேர தேசிய சேவையாளர்களும் ஆயுதப் படையினரும் தங்களது அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு 11B எனப்படும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ராணுவ அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அடையாள அட்டையின் பாதுகாப்பு கருதி மே 15 முதல் இந்த நடைமுறை கைவிடப்படுகிறது.
ராணுவ அடையாள அட்டை சிங்கப்பூர் ஆயுதப்படையின் சேவை வீரர் என்பதற்கான அடிப்படை ஆதாரப் பத்திரம் என்பதால் அது வழங்குவது தொடரும் என்று அமைச்சு கூறியுள்ளது.
புதியவர்களிடம் அடையாள அட்டை வாங்குவது நிறுத்தப்படுகிற அதேநேரம் தற்போது சேவையில் உள்ள முழுநேர தேசிய சேவையாளர்களின் அடையாள அட்டையும் அவர்களின் மனிதவள அலுவலகங்கள் மூலமாக கட்டம் கட்டமாகத் திருப்பித் தரப்படும்.
அடையாள அட்டையைத் திருப்பித் தரும் பணி நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
உள்துறை அமைச்சும் தனது உள்துறை குழுவில் முழுநேர தேசிய சேவையாளராக இம்மாதம் முதல் சேருவோரிடம் அடையாள அட்டை பெறுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் காவற்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் சேவை யாளர்களுக்கு தேசிய சேவையாளர் அடையாள அட்டை வழங்குவது தொடரும். ஏற்கெனவே பெற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பதிவு அடையாள அட்டையை (என்ஆர்ஐசி) கட்டம் கட்டமாகத் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முழுநேர தேசிய சேவையாளராகவும் ஆயுதப் படை வீரராகவும் சேருவோர் தங்களது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்னும் நடைமுறை, தேசிய சேவை அறிமுகம் செய்யப்பட்ட 1967ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. கடந்த 55 ஆண்டுகளில் மில்லிய னுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசிகளும் தங்களது தேசிய சேவைக் கடைமையை நிறை வேற்றியுள்ளனர்.