பீச் ரோடு தாக்குதல்: பாதிக்கப்பட்ட மாதுக்கு உதவ அறநிறுவனம் நிதி திரட்டுகிறது

பீச் ரோடு தாக்குதல்: பாதிக்கப்பட்ட மாதுக்கு உதவ அறநிறுவனம் நிதி திரட்டுகிறது

2 mins read
a489c78c-1e58-41c6-b0a4-499b6d9f7bbe
'ரே ஆஃப் ஹோப்' என்ற அறநிறுவனம் திருவாட்டி ஹான் ஹோங்லிக்காக $105,400 திரட்டுகிறது. படங்கள்: சமூக ஊடகம் -

பீச் ரோட்டில் செயல்படும் ஓர் உணவகத்திற்கு வெளியே, ஒரு மாது சென்ற மாதம் கொடூரமாகக் கத்தியால் தாக்கப்பட்டார்.

வேலை அனுமதிச்சீட்டின் பேரில் இங்கு வேலை பார்த்துவந்த சீனா வைச் சேர்ந்த திருவாட்டி ஹான் ஹோங்லி என்ற அந்த 42 வயது மாது இப்போது ரென் சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு வதாகத் தெரிகிறது.

அந்த மாதின் சிகிச்சைக்காகவும் இதர செலவுகளுக்காகவும் $105,400 தேவைப்படுகிறது.

இதை அவரின் அனுமதியுடன் 'ரே ஆஃப் ஹோப்' என்ற அறப்பணி இணையத்தளம் பொதுமக்களிடம் இருந்து திரட்டி வருகிறது.

கத்தியால் தாக்கப்பட்ட திருவாட்டி ஹானின், தலை, கண்கள், கைகளில் காயங்கள் ஏற்பட்டன.

அவருக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இன்னும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தால்தான் கண்பார்வை வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் கடுமையான காயங்கள் இருந்தாலும்கூட அதை எல்லாம்விட தன் பிள்ளைகளைப் பற்றித்தான் அந்த மாது அதிகம் கவலைப்படுகிறார்.

ஒவ்வொரு நாளும் வலியால் துடிப்பதாகவும் தன் பிள்ளைகளை நினைத்து நினைத்து பிள்ளைகளுக்காகத்தான் உயிரோடு இருப்பதாகவும் அந்த மாது கூறுகிறார்.

திருவாட்டி ஹானுக்கு 20 மற்றும் 17 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்கள் சீனாவில் திருவாட்டி ஹானின் உறவினர்களிடம் வளர்ந்து வருகிறார்கள் என்று நிதி திரட்டும் அறநிறுவனம் இணையத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

அந்த மாதின் மருத்துவச் செலவுக்கு மேலும் பணம் தேவைப்படக்கூடும். ஆகையால், தேவை எனில் அதிகம் திரட்டப்போவதாக வும் அறநிறுவனம் தெரிவித்தது.

பீச் ரோட்டில் 'ஸோங் ஹுவா ஸ்டீம்போட் ரெஸ்டாரண்ட்' என்ற உணவகத்திற்கு வெளியே செங் குவோயுவன், 46, என்பவர் ஏப்ரல் 14ஆம் தேதி அந்த மாதைக் கத்தியால் தாக்கினார்.

ஆடவரைத் தடுக்க உணவக ஊழியர்கள் பலரும் பெரு முயற்சி மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி பெரும் பரபரப்பானது. திருவாட்டி ஹானும் செங்கும் பிரிந்துவிட்ட தம்பதியர்.

செங் மீது ஏப்ரல் 16 ஆம் தேதி கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது. நன்கொடை அளிக்க விரும்புவோர் https://rayofhope.sg/campaign/ms-han/ என்ற முகவரியை நாடலாம்.