'எதிர்காலப் பங்களிப்புக்கு ஆசியான் நல்ல நிலையில் உள்ளது'

'எதிர்காலப் பங்களிப்புக்கு ஆசியான் நல்ல நிலையில் உள்ளது'

2 mins read
d00dbbe4-ed23-4ed5-96f6-ab044bc4e411
-

பசுமை மாற்றம், மின்னிலக்கமயமாதல், விநியோகச் சங்கிலிகளின் மீள்திறன் போன்ற எதிர்காலத்தைப் பாதிக்கும் பெரிய மாற்றங்களுக்குப் பங்களிப்பதற்கும் அதிலிருந்து பயனடைவதற்கும் ஆசியான் நல்ல நிலையில் உள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

"வேலையின் எதிர்காலம் எதிர்கால பொருளியலுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் நேரடியாகவும் மெய்நிகர் மூலமாகவும் நடத்தப்பட்ட மனிதவளத் தொழில்நுட்ப விழா 2022ல் நேற்று பேசியபோது இவ்வாறு கூறினார்.

உதாரணத்துக்கு, விநியோகச் சங்கிலியின் மீள்திறனை வலுப்படுத்த தென்கிழக்கு ஆசியா மேம்பட்ட உற்பத்திக்கான மாற்றுத் தளமாக இருக்கலாம். இப்பகுதியின் கரிம இருப்பு, கரிம அகற்றலுக்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

"இந்தப் புதிய வர்த்தக வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள்ள நாடுகள் அடுத்த திறன் அலையில் கையகப்படுத்திக் கொள்ள அவசியம் உள்ளது. கணினி அறிவியல், மின்னிலக்கத் திறன்கள் முதல் அலையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அடுத்த அலை பசுமைத்திறன்களைக் கொண்டுள்ளதாக இருக்கிறது," என்று திரு ஹெங் மேலும் தெரிவித்தார்.

"கடந்த பத்தாண்டு காலத்தில், மின்னிலக்க அலை பெரிய அளவில் நம்மை நோக்கி வந்தது. மின்னிலக்கப் பொருளியல் இப்போது வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக உள்ளது. ஏராளமான மின்னிலக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகி, முன்பு கேள்விப்படாத பல நல்ல வேலைகளையும் தொழில் களையும் உருவாக்கியுள்ளன," என்று அவர் கூறினார்.

"பல உணவங்காடிக் கடைக்கார்களும் சிறிய நிறுவனங்களும் மின்னிலக்கமயமாகிவிட்டன. மின்னிலக்கத் திறன்கள் இப்போது பல வேலைகளுக்கு எவ்வாறு அடித்தளமாக உள்ளன. இப்போது வளர்ந்து வரும் பசுமை அலையை நாடுகள் கைப்பற்ற வேண்டும்," என்று துணைப் பிரதமர் விவரித்தார்.

பல்வேறு தொழில்துறை சவால்களைச் சமாளித்து முன்னேற நிறுவனங்கள், ஊழியர்கள், அரசாங்கங்கள் போன்ற பங்குதாரர்கள் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்.

கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக உருவாகியுள்ள சமூக விதிமுறைகள், ஊழியர்களின் விருப்பங்கள் ஆகியவற்றுடன் ஒத்துப்போக, ஊழியரணியும் தன்னை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

நீக்குப்போக்கான பணியிடங்கள் நிரந்தர அம்சமாகியுள்ளது. வீடு, அலுவலகப் பணிச்சூழலுக்கு ஏற்றவாறு நிறுவன மேலதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதேவேளையில் அது வர்த்தக முடிவுகளுக்குப் பாதகமாக அமைந்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.

இவ்வாண்டின் மனிதவளத் தொழில்நுட்ப விழா இன்றுடன் நிறைவுபெறும்.