சிங்கப்பூரில் முதலாவது சுற்றுச்சூழல் தீர்வுகள் உற்பத்தி ஆலை நேற்று துவாஸில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
200,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பசுமை ஆய்வகம்,
மக்கிப்போகும் பிளாஸ்டிக் பைகள், மக்கிப்போகும் கரண்டிகள் ஆகியவை தொடர்பில் உணவு, பான நிறுவனங்கள் போன்ற வர்த்தகங்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும்.
மேலும் இது ஆசியான் வட்டாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் அச்சுத் தொழில் நிறுவனமான பிரிண்ட் லேப் மற்றும் டைம்ஸ் பப்ளிஷிங் குழுமத்தின் உறுப்பினரான டைம்ஸ் பிரிண்டர்ஸ் மூலம் பசுமை ஆய்வகம் தொடங்கப்பட்டது.
உணவு, பான மற்றும் பதிப்பிப்பு நிறுவனமான ஃப்ரேசர் அண்ட் நீவ் அதன் வெளியீட்டு பிரிவான டைம்ஸ் பப்ளிஷிங் மூலம் பசுமை ஆய்வகத்தில் 60 விழுக்காட்டு பங்குகளை வைத்துள்ளது.
தொடக்க விழாவை மூத்த அமைச்சரும், சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் தொடங்கி வைத்து, புதிய ஆலையையும் பார்வையிட்டார்.
இந்த ஆலை முற்றிலும் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகவும் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் மக்கிப்போகக் கூடிய காகிதப் பைகளை உருவாக்குகிறது.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய சிங்கப்பூரின் முதலாவது முழுமையான மக்கும் தாவர மூலப் பொருட்களால் ஆன பைகள் சிலவற்றையும் இது தயாரிக்கும்.
வாடிக்கையாளர்களுக்கான அடிப்படைத் தயாரிப்பாக பிவிசி அல்லாத பதாகைகள், ஒட்டுவில்லைகளைப் பயன்படுத்துவதை முழுமையாக ஒருங்கிணைக்கும் முதல் அச்சு முகவராகவும் இந்த ஆய்வகம் செயல்படும்.
மேலும் உணவு, பான நிறுவனங்களுக்குத் தேவையான பொட்டலமிடும் பொருட்களையும் தயாரிக்கும்.
இந்தத் தயாரிப்புகளில் Cassa180 எனப்படும் முழுமையாக மக்கும் பை இருக்கும். இது முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்கு வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இந்தப் பை மூன்று நிமிடங்களில் வெந்நீரில் கரைந்துவிடும் அல்லது வெளிப்புறத்தில் வைக்கப்பட்டால் 180 நாட்களில் கரைந்துவிடும்.
பசுமை ஆய்வகம். கிராஃப்ட் காதிதத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொட்டலமிடும் பொருள் களின் விநியோகிப்பாளர்.
இது முழுமையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது அல்லது நிலையான ஆதாரமாக இருக்கும் பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
"பசுமை இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நாங்கள் பொறுப்புடன் வர்த்தகம் புரிந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.
"நிறுவனங்கள் தங்கள் வழக்கமான செயல்முறைகளிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வர வாய்ப்பளிப்பதே எங்களின் நோக்கம்," என்றார் பசுமை ஆய்வகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பசுமை ஆய்வகத்தின் இணை நிறுவனருமான திரு முரளிகிருஷ்ணன் ரங்கன்.

