விசாக தின வாரயிறுதியில் சிங்கப்பூரிலிரிருந்து தரைவழியாக மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளோர் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சுங்கச்சாவடியில் அதிக போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க நேரிடும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு விசாக தினம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீண்ட விடுமுறையை முன்னிட்டு பலரும் மலேசியா சென்று வர திட்டமிட்டு உள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு விசாக தின விடுமுறையில் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் தரைவழி சுங்கச்சாவடிகளில் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, வரும் நீண்ட வாரயிறுதியில் மலேசியாவுக்குச் செல்லவிருப்போர் குடிநுழைவு அனுமதி பெறுவதற்கு ஆகும் நேரத்தையும், போக்குவரத்து நெரிசலின் நிலையையும் கணக்கிட்டு அதற்கு தக்கவாறு பயணத்தைத் திட்டமிட வேண்டும்.
சிங்கப்பூரிலிருந்து புறப்படுவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையிலும் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அதிக போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க நேரிடலாம்.
இதேபோல், சிங்கப்பூருக்கு வருகை தருவோர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் சாலைகளில் காத்திருக்கக்கூடும். போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது வாகனங்களில் பயணிப்பதைவிட பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம்.
தரைவழிப் பயணங்களுக்கான வழித்தடங்களின் முக்கியமான சந்திப்புகளை போக்குவரத்து காவல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனமோட்டிகள், சுங்கச்சாவடியை அடையும்போது வாகனத்தில் முக்கால் பகுதி எரிபொருள் இருப்பதை உறுதிசெய்வது அவசியம். தவறும் நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆணையம் நினைவூட்டியது.

