சிங்கப்பூரில் ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ தற்காலிகமாக, பயணக் கட்டணத்திலும் காத்திருப்புக் கட்டணத்திலும் ஒரு காசு உயர்வை ஜூலை மாத இறுதிவரை நீட்டித்துள்ளது. எரிபொருள் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வு ஏப்ரல் 4ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை மற்ற போக்குவரத்து நடத்துநர்களும் நடைமுறைப்படுத்தினர்.
இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வு ஜூலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடப்பில் இருக்கும் என்று குறிப்பிட்ட கம்ஃபர்ட்டெல்குரோ, மார்ச் 1ஆம் தேதி உயர்த்தப்பட்ட சாலையில் டாக்சியை நிறுத்தி பயணம் செய்யும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இராது என்றும் கூறியது.
ஏப்ரலில் தற்காலிகக் கட்டண உயர்வை அறிவித்த அந்நிறுவனம், அந்த மாத இறுதியில் நிலைமையைப் பரிசீலனை செய்யும் என்றும் எரிபொருள் விலையின் நிலைமை மேம்பட்டிருந்தால், கட்டண உயர்வு அகற்றப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால் எரிபொருள் விலை இறங்கவில்லை.