ஆர்வலர் கில்பர்ட் கோ தாம் பதிவிட்ட அறிக்கையில் திருத்தமிட வேண்டும் என்று பொஃப்மா எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் ஒருவருக்கும் அவரது துணைவருக்கும் அவசரமாக நிதி உதவி தேவைப்பட்டதாகவும் ஆனால் ஆதரவுக்கரம் நீட்ட யாரும் இல்லை என்றும் கடந்த மாதம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கோ பதிவு செய்திருந்தார்.
அதிகாரிகளிடமிருந்து அப்பெண்ணுக்கும் அவரது துணை
வருக்கும் உதவி கிடைக்கவில்லை என்ற எண்ணத்தை கோவின் அறிக்கை ஏற்படுத்தியதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று கூறியது.
சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது துணைவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடமிருந்தும் ஒருங்கிணைப்பட்ட பராமரிப்பு அமைப்பு, மெக்பர்சனில் உள்ள டிஎச்கே குடும்பச் சேவை நிலையம் போன்ற அமைப்புகளிடமிருந்தும் உதவி பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு கோவின் அறிக்கை கடந்த மாதம் 24ஆம் தேதியன்று பதிவு செய்யப்படுவதற்கு முன்பு அப்பெண் மேற்கொண்டு உதவி கேட்கவில்லை என்று அமைச்சு கூறியது.
இந்த அறிக்கையில் கோ திருத்தமிட வேண்டும் என்று பொஃமா சட்டத்தின்கீழ் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி உத்தரவிட்டதாக அமைச்சு தெரிவித்தது.
நேற்று காலை நிலவரப்படி அந்த அறிக்கை தொடர்பாகத் தேவையான திருத்தத்தை கோ செய்துவிட்டதாக தெரிவிக்கப்
பட்டது.

