சிங்கப்பூரில் நுவாக்ஸோவிட் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் 'எம்ஆர்என்ஏ' அல்லாத தடுப்பு மருந்தாகும். 18 வயதும் அதற்கு மேற்பட்டோரும் இம்மாதம் 18ஆம் தேதியில் இருந்து இதனைச் செலுத்திக்கொள்ளலாம்.
'நோவாவேக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் நுவாக்ஸோவிட் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவோர் நேற்று முதல் அதற்குப் பதிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகள் கூடுதல் நோய்த் தடுப்புத் திறன் மிக்கவை என்பதைச் சுகாதார அமைச்சு சுட்டியது.
மருத்துவரீதியாக இவற்றுக்குத் தகுதிபெறாதோர் நுவாக்ஸோவிட் தடுப்பூசி குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அமைச்சு கூறியது.
இம்மாதம் 18ஆம் தேதியில் இருந்து பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் இருபதிலும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.
அத்துடன் 'ஜேடிவிசி' எனப்படும் கொவிட்-19 பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களையும் நாடலாம்.
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த தகவல்களை https://www.vaccine.gov.sg/locations என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூர் மக்கள்தொகையில் 92 விழுக்காட்டினர் கொவிட்-19க்கு எதிரான முதல் இரண்டு தடுப்பூசிகளையும் 75 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

