சிங்கப்பூர் காவல்படையும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் இணைந்து நேற்று தீவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் போன்ற பாவனைப் பயிற்சியில் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
'சிங்கப்பூர் எக்ஸ்போ'வில் நடைபெற்ற பாவனைப் பயிற்சியில் வெடிபொருள் மிரட்டல், வெடிகுண்டை உடலில் பிணைத்துக்கொண்டு தாக்குவோர், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு சமாளித்தனர்.
பயிற்சியின் இரண்டாம் கட்டமாக 'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்' கல்வி நிலையத்தில் பாவனையாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அதிகாரிகள் எதிர்கொண்டனர்.
இரு பாவனைப் பயிற்சிகளிலும் காயமடைந்ததாக பாவனை செய்தோரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆயுதப் படையினர், கணினி, தொழில்நுட்பப் பிரிவினர், தொடர்பு, தகவல் பிரிவினர் போன்றோர் பாவனைத் தாக்குதல்கள் நடந்த இடங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 'கே-9' பிரிவின் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.
'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்டில்' நடந்த பயிற்சியில் ஆளில்லா வானூர்தி அந்த இடத்தின் படங்களை எடுத்து ஆயுதப்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியது.
சிங்கப்பூர் காவல்படையும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் முறையான இடைவெளியில் கூட்டுப் பயிற்சி நடத்துவது வழக்கம்.
அதிகாரிகளின் தயார்நிலை, உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்த இத்தகைய கூட்டுப் பயிற்சி உதவுவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

