மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அண்மையில் தீவு முழுவதும் மேற்கொண்ட ஒரு பெரிய திடீர் சோதனை நடவடிக்கையில், பிரேடல் வியூ பகுதியில் கிட்டத்தட்ட $1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலும் போதைப் பொருள் குற்றங்களுக்காக 102 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தந்தை-மகன் ஜோடியும் அடங்குவர்.
பிரேடல் ஹில் பகுதியில் உள்ள இரு குடியிருப்புகளில் சுமார் 20.4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 24 வயது மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அண்மைய ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிஎன்பி அதிகாரிகள், 14 ஆண்டுகளில் ஆகப் பெரிய போதைப் பொருள் நடவடிக்கையாக 20.5 கிலோ கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினர். அதற்கு ஒரு மாதம் கழித்து சிஎன்பி அதிகாரிகளிடம் 24 கிலோ கிராம் கஞ்சா சிக்கியது. அது 25 ஆண்டுகளில் ஆகப் பெரிய கைப்பற்றல்.
இது குறிக்கு நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் உளவுப் பிரிவு இயக்குநர் சூப்ரின்டென்டண்ட் ஏரன் டேங், "போதைப் பொருள் சிங்கப்பூரில் விளைவது அல்ல. ஆக இவையெல்லாம் வெளிநாடுகளிலிருந்து இங்கு கடத்தி வரப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள போதைப் பொருள் பெரும்புள்ளிகள் சிங்கப்பூருக்குப் போதைப் பொருளை விநியோகிக்க முயல்கிறார்கள்," என்றார்.
அப்படி இருக்கும்போது, இந்த அளவுக்குப் போதைப் பொருள் எவ்வாறு சிங்கப்பூருக்குள் கொண்டு வரப்பட்டது என்று கேட்கப்பட்டதற்கு, "அது குறித்து தீவிர புலனாய்வு நடந்துகொண்டிருக்கிறது. போதைப் பொருள் எவ்வாறு இங்கு கொண்டு வரப்பட்டது என்றும் அவை எப்படி பறிமுதல் செய்யப்பட்ட இடத்துக்கு வந்தது என்றும் விசாரித்து வருகிறோம்," என்றார் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் செயல்முறை பிரிவின் துணை இயக்குநர் உதவி ஆணையாளர் லியோன் சான்.
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த ஐந்து நாள் அமலாக்க நடவடிக்கையில் 6.227 கிலோ கிராம் ஹெராயின், 724 கிராம் 'ஐஸ்', 20.438 கிலோ கிராம் கஞ்சா, உடலின் செயல்பாட்டைப் பாதிக்கும் மூன்று கிராம் போதை மாத்திரைகள் போன்றவற்றை அதிகாரிகள் அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், இயோ சூ காங் என பல்வேறு இடங்களில் கைப்பற்றினர்.
இவற்றின் மொத்த மதிப்பு $1.195 மில்லியன் என்றும் இவை 2,960 ஹெராயின் புழங்கிகள், 410 ஐஸ் புழங்கிகள், 2,910 கஞ்சா புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளைய பெண்ணுக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.

