பல்வேறு பெண்களைப் பின்தொடர்ந்ததற்காக பல முறை சிறைக்குச் சென்று வந்த 46 வயது ஆடவர், ஹாலந்து ரோட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக மீண்டும் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டார்.
காலின் மாக் இயூ லூங் எனும் அந்த ஆடவர் தாம் வசிக்க வீடு இல்லை என்றும் தமது குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் கூறினார்.
இந்தக் குற்றங்களுக்காக மாக்குக்கு நேற்று எட்டு நாள் சிறையும் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதம் செலுத்த தவறினால் அவர் கூடுதலாக 16 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் ஐஸ்கிரீம் அரும்பொருளகம், செயின்ட் ஜார்ஜஸ் தேவாலயம், குளுனி ரோட்டில் உள்ள அலுவலக, குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றில் மாக் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பெண்களைப் பின்தொடர்தல், அவர்களுக்குத் தொல்லை கொடுத்தல் போன்ற பற்பல குற்றங்களுக்காக மாக், நவம்பர் 2020ல் ஒன்பது மாதச் சிறை, செப்டம்பர் 2019ல் இரண்டு மாதச் சிறை, டிசம்பர் 2013ல் மூன்று ஆண்டு சிறை, $5,000 அபராதம் என்று தண்டனைகள் பெற்றுள்ளார்.
தாம் செய்த குற்றச்செயல்களுக்காக தாம் வருந்துவதாகவும் தற்போதைய தண்டனையை நிறைவேற்றிய பின் இயல்பான வாழ்க்கையைத் தொடர போவதாகவும் மாக் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

