செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
086ad0ec-7cd0-4c39-a832-80be7aaa3b92
-

சிங்கப்பூர் ஆயுள்காப்புறுதி விற்பனை முதலாம் காலாண்டில் 2% சரிவு

சிங்கப்பூர் ஆயுள்காப்புறுதித் தொழில்துறை இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 2% சரிவு கண்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, புதிய வர்த்தக காப்புறுதித் திட்டங்கள் மூலம் அதற்கு $1.23 பில்லியன் வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த வருவாய் $1.21 பில்லியனுக்குக் குறைந்தது.

கடந்த ஆண்டின் வருடாந்திர காப்புறுதித் திட்டங்கள் மூலம் கிடைத்த வருவாய் $692.8 மில்லியனிலிருந்து $555.1 மில்லியனுக்கு அதாவது 20% சரிந்தது என்று ஆயுள் காப்புறுதிச் சங்கம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் ஒற்றைச் சந்தா செலுத்தும் காப்புறுதித் திட்டங்கள் மூலம் கிடைத்த வருவாய் 21% அதிகரித்தது. கடந்த ஆண்டின் வருவாய் $541.6 மில்லியனாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் வருவாய் $655.4 மில்லியனாக கூடியது என்று ஆயுள் காப்புறுதிச் சங்கத்தின் தலைவர் கோர் ஹோக் செங் தெரிவித்தார்.

லாரிக்குள் கடத்தப்பட்ட 17 நாய்கள், 8,520 மின்-சிகரெட் பாகங்கள் சிக்கின

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரிக்குள் மறைத்து 17 நாய்களையும் 8,520 மின்-சிகரெட் பாகங்களையும் கடத்தும் முயற்சியை சுங்கத்துறை, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முறியடித்தனர்.

துவாஸ் சோதனைச் சாவடிக்கு வந்த அந்த லாரியில், கூடுதல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது லாரியில் அமைக்கப்பட்டிருந்த படுக்கைக்குள்ளும் ஓட்டுநர் பகுதியில் உள்ள பெட்டிக்குள்ளும் அவை மறைத்து வைக்கப்பட்டி ருந்தன என்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டது. பொருள்கள் மற்றும் நாய்கள் பறிமுதலுக்குப் பிறகு லாரி ஓட்டுநரும் அவரது உதவியாள ரும் தேசிய பூங்காக் கழகத்திடமும் சுகாதார அறிவியல் ஆணையத்திடமும் கூடுதல் புலனாய்வுக்காக ஒப்படைக்கப் பட்டன. நாய்கள் தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு, நோய் இருக்கிறதா என்று கண்காணிக்கப்படும்.

46 ஆண்டு தொடர் ஏமாற்றுப் பேர்வழி மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு

ஏமாற்றுக் குற்றங்களுக்காக சிறைக்குச் சென்று கடந்த ஆண்டு விடுதலையான அவர் சில மாதங்களிலேயே, தனக்கு அவசரநிலை என்று பலரிடம் கூறி அவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதற்காக 72 வயது இங் தியாம் சூன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ள இங், தம் மீது சுமத்தப்பட்ட $1,300 மதிப்புள்ள ஏழு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார். மேலும் 13 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

46 ஆண்டுகளாக அவர் அனுபவித்த தண்டனைகள் ஏன் அவரை குற்றச்செயல்கள் புரிவதிலிருந்து இன்னும் மாற்றவில்லை என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எடி தாம் கேள்வி எழுப்பினார். ஆகவே, இங்குக்கு சீர்திருத்த தண்டனை விதிப்பது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் படி அவர் அரசுத்தரப்பு வழக்கறிஞர் யீ ஜியா ரோங்கைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நல்ல நடத்தைக்காக சிறைத் தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியைக் குறைக் கும் சலுகையை இங் இழக்கக்கூடும்.

விசாரணைக் காவலில் உள்ள இங், அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

மதுபோதையில் வாகனமோட்டிய நிறுவன இயக்குநருக்கு சிறை, அபராதம்

இந்தோனீசிய நிலக்கரி நிறுவனம் ஒன்றின் இயக்குநரான 51 வயது சார்ல்ஸ் ஆண்டனி மெலாத்தி, சிங்கப்பூரில் இரண்டா வது முறையாக மதுபோதையில் வாகனமோட்டி குற்றம் புரிந்ததற்காக நேற்று அவருக்கு எட்டு வாரச் சிறை, $15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் விடுதலையான பிறகு அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி நேற்று ஒப்புக்கொண்டார். அவர் இதுபோன்ற குற்றத்தை 2006 ஆண்டிலும் புரிந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி நண்பர்களுடன் செந்தோசாவில் மது அருந்திவிட்டு, வீட்டுக்குத் தனது காரில் சென்ற சார்ல்ஸ், சாலையோரத் தடுப்பில் காரை ஏற்றிவிட்டார். போக்குவரத்து காவல்துறை தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது சுவாசக்காற்றில் 92 மைக்ரோகிராம் அளவு மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.