சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதமாக வெப்பமான வானிலை சுட்டெரிக்கும் வெயிலாக பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
அந்த வகையில் ஏப்ரலில் ஆக அதிகமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மே மாதம் இன்னும் அதிக வெப்பம் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி அட்மிரல்டி பகுதியில் 36.8 டிகிரி வெப்பம் பதிவானது. இது 1987ம் ஆண்டில் தெங்கா பகுதியில் பதிவான 37 டிகிரி வெப்பத்தைவிட 0.2 டிகிரிதான் குறைவு.
சிங்கப்பூர் வெப்ப அலைகளால் தாக்கப்படும் சூழ்நிலை அமையாது என்று கூறும் வானிலை நிபுணர்கள், குடியரசின் வெப்பம் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இருந்ததில்லை என்றும் கூறினர்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் சிங்கப்பூரும் இதர உலக நாடுகளும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான வெப்பத்தை அனுபவிக்க நேரிடலாம்.
குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்ட தேசிய சுற்றுப்புற வாரியத்தின் கீழ் இயங்கும் வானிலை ஆய்வு மையம், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பாய லேபாரிலும் மரினா அணைக்கட்டிலும் வெப்பம் 35.6 டிகிரி பதிவானது என்றும் தெரிவித்தது.

