பலரிடமிருந்து மொத்தம் 6.4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்ததாக 306 பேர் சந்தேகிக்கப்படுகின்றனர்.
அவர்களில் 115 பேர் ஆண்கள், 191 பேர் பெண்கள். சந்தேக நபர்கள் 15லிருந்து 74 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சென்ற மாதம் 29ஆம் தேதிக்கும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் இடையே வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவும் காவல்துறையும் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
941க்கும் அதிகமான மோசடிச் செயல்களில் ஈடுபட்டு பணம் பறித்ததாகச் சந்தேகிக்கப்படும் அவர்களின் மீது விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை சனிக்கிழமையன்று (மே 14) தெரிவித்தது.
இணையக் காதல் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, சீனாவைச் சேர்ந்த அல்லது அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடி உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

