முரசொலி
இலங்கை பல ஆண்டுகாலமாக பிரிவினைவாத வன்செயல்களில் சிக்கி சீரழிந்த நாடு.
கடைசியாக 2009ல் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுங்கி பிரிவினைவாதப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. நாட்டைத் துண்டாட இடம்பெற்ற சதித்திட்டங்களைச் சுக்குநூறாக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த ராஜபக்சே மக்களிடம் பேராதரவைப் பெற்ற தலைவரானார்.
பிறகு ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு கோலோச்சத் தொடங்கியது.
ராஜபக்சேவின் சசோதரர் கோத்தபாய ராஜபக்சே 2019ல் அதிபராகவும் அவரின் அண்ணனான மகிந்த 2020ல் பிரதமராகவும் மற்ற இரண்டு சகோதரர்கள் வலுவான பதவியிலும் இருந்து இலங்கையை ஆண்டு வந்த சூழலில், நாடு இப்போது மற்றொரு வன்செயல் போராட்டத்தை எதிர்நோக்குகிறது.
இப்போது பொருளியல் போராட்டம் விஸ்வரூபமாகத் தலை எடுத்து இருக்கிறது.
ராஜபக்சே சகோதரர்கள் நாட்டின் பொருளியலைப் பாழடித்துவிட்டார்கள். அவர்கள் குடும்பமே பதவி விலக வேண்டும் என்று கடந்த ஏப்ரல் முதலே பல தரப்பு மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து வன்செயல்வெடித்தது.
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட எட்டுப்பேர் இதுவரை மரணமடைந்துவிட்டனர்.
ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டு, கடைசியாக வேறுவழியின்றி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகி இருக்கிறார். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி பிரதமர் என்பவர் அமைச்சரவையின் தலைவர். ஆனால் அரசமைப்புச் சட்டப்படி, நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை பிரதமரைவிட அதிபருக்குத்தான் அங்கு அதிகாரங்கள் அதிகம்.
இத்தகைய ஓர் ஏற்பாடு மாற வேண்டும் என்று நெடுங்காலமாக குரல் எழுந்து வருகிறது.
இலங்கை சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை சந்தித்திராத படுமோசமான பொருளியல் நெருக்கடிகளை எதிர்நோக்கி கிட்டத்தட்ட நொடித்துப்போகும் நிலையில் இருக்கிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. ஆகையால் எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. அதிகமாக கடன் வாங்கி அநியாய வட்டி செலுத்த வேண்டி இருப்பதால் மேற்கொண்டும் எப்படி யாரிடம் கடன் வாங்குவது என்பது தெரியாமல் நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது.
65,610 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இலங்கையில் கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இலங்கை பொருளியலுக்குத் தேயிலை ஏற்றுமதி, ஆடை உற்பத்தி, சுற்றுலாத்துறை மூன்றும் மிக முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு அந்த நாட்டில் அடுக்கடுக்காக பல குண்டுகள் வெடித்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குறைந்துவிட்டனர். போதாக் குறைக்கு கொரோனா தொற்று சுற்றுலாத் துறையை அறவே படுக்கவைத்துவிட்டது.
இவை போதாது என்று அதிபரான கோத்தபாய ராஜபக்சேவின் பொருளியல் கொள்கைகளும் நாட்டை இறங்குமுகமாக்கிவிட்டதாக எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. நடப்பில் இருந்த வரியைக் குறைத்ததால் அரசாங்கத்தின் வருமானம் பாதிக்கப்பட்டது.
நூற்றுக்குநூறு இயற்கை விவசாயத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தியதால் உணவு உற்பத்தி பாதிக்குப் பாதி குறைந்துபோனது. தேயிலை உற்பத்தியும் முடங்கியது. ஏற்றுமதிகளும் குறைந்தன.
அந்நிய கையிருப்பு கிடுகிடுவென சரிய, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை எற்பட்டது. ஏற்கெனவே பெரும் வட்டிக்கு வாங்கி கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலையில் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
இவை எல்லாம் சேர்ந்து பொதுமக்களைப் பெரிதும் பாதித்தது. அவர்களின் அன்றாட வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலைக்கு ராஜபக்சேக்களின் நிர்வாகமே காரணம்; அவர்கள் பதவியைவிட்டு விலகினால்தான் நாட்டிற்கு விமோசனம் பிறக்கும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
செலவுக்குப் பணம் வேண்டும்; எரிபொருள் வேண்டும், மூன்று வேளை உணவு வேண்டும்; மின்சாரம் வேண்டும் என்று மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அவை வன்செயல் ஆர்ப்பாட்டமாக மாறியதை அடுத்து பிரதமர் விலகிவிட்டார்.
தேர்தலிலும் அரசியலிலும் கோலோச்சி வந்த ராஜபக்சேக்களின் செல்வாக்கு இப்போது முன் ஒருபோதும் இல்லாத அளவுக்குச் சரிந்து இருக்கிறது. எல்லாருமாகச் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைத்து பொருளியலை மீட்டெடுப்போம் என்று அதிபர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியினர் நிராகரித்து இருக்கிறார்கள்.
கடைசியாக, பிரதமர் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கேயிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் புதிய அரசை அமைக்க அவர் திணறிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் மேற்கத்தியச் சந்தை பொருளியல் ஆதரவாளர். அவர் ஆறாவது முறையாக இலங்கையின் பிரதமராகப் பதவி ஏற்று இருக்கிறார். இந்தியா போன்ற பக்கத்து நாடுகளுடன் தோழமை உறவைக் கடைப்பிடித்து வருபவர் ரணில் என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இலங்கையின் ஜனநாயகத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் பொருளியல் மீட்சிக்கும் உதவப் போவதாக இந்தியா ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது.
புதிதாக பிரதமர் பொறுப்பேற்று இருக்கும் ரணில், நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலில் பெறவேண்டும். பொருளியலை மீட்சிப் பாதைக்குத் திருப்பி அதை மேம்படுத்த வேண்டும்.
அதிபர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ராணுவத்தைப் பணியில் ஈடுபடுத்தி ஆர்ப்பாட்டத்தை இப்போதைக்கு ஒடுக்கி இருக்கிறார்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களோ அதிபர் பதவி விலகும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்கள். அதிபரும் தான் விலகப் போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறார். தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிடலாம் என்று அதிபர் கருதி னால் அது விவேகமற்ற முடிவாகவே இருக்கும்.
இந்த நெருக்கடியான சூழலில் ரணில் விக்ரமசிங்கேவின் அனுபவமும் அவர் எப்படி செயல்படப்போகிறார் என்பதும் மிக முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. இலங்கையில் நிரந்தர அமைதிக்கு அரசமைப்புச் சட்ட மாற்றமும் பொருளியல் மாற்றங்களும் தேவை என்றுதான் யூகிக்க முடிகிறது.
பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்புகளும் சேர்ந்து அமைதியாக இதைச் சாதிக்க வேண்டும்.

