ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு;
ஆடவருக்கு அபராதம்
'ஸ்விஃப்ட்ஃபாக்ஸ் பிரைவெட் லிட்' என்ற சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் நிர்வாகியான ஃபோங் சோங் வென், 42, என்ற சிங்கப்பூரர், 2019 ஏப்ரல் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் சில்லறைப் பொருள்களை இறக்குமதி செய்தார்.
ஆனால் அதற்குச் செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். இதற்காக அவருக்கு இம்மாதம் 12ஆம் தேதி $63,834.90 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தெரிவித்தது.
தீ: புகையை சுவாசித்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் இருக்கும் எண் 261 கட்டடத்தில் நேற்று முன்தினம் பின்னிரவு 1.20 மணிக்குத் தீ மூண்டது. அதில் புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப் பட்ட ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
கட்டடத்தில் முதல் மாடியில் செயல்படும் காப்பிக்கடையின் சமையல் அறையில் இருக்கும் புகை போக்கிக்குழாயில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்தப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதற்கு முன்பே ஏறக்குறைய 20 பேர் பாதுகாப்பாக வெளியேறினர். பிடோக் நார்த்தில் நான்காவது மாடி வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை மூண்ட தீயில் மூன்று பேர் பலியாயினர். அதற்கு அடுத்த நாள் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
போதைப் புழக்கத்தைக் கைவிட முயல்வோருக்கு உதவ நிலையம்
உட்லண்ட்சில் ஒரு புதிய நிலையம் நேற்று திறக்கப்பட்டது. போதைப் புழக்கத்தைக் கைவிட்டு அதிலிருந்து மீண்டு வருவோர் அந்த நியைத்திற்குச் சென்று ஆலோசனை பெறலாம். வேலை தொடர்பில் உதவி கிடைக்கும்.
உடலில் பச்சை குத்திக்கொண்டு இருப்போர் அதை அகற்றிக்கொள்ளலாம். புதிய நிலையத்தை சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்புச் சங்கம் (சானா) நிர்வகித்து நடத்துகிறது. 'ஸ்டெப்-அப்@நார்த்வெஸ்ட்' என்ற அந்த நிலையம் இத்தகைய மூன்றாவது நிலையமாகும்.
உள்துறை துணை அமைச்சர் ஃபைசல் இப்ராஹிம் புதிய நிலைய திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
புதிய நிலையம் 'ஏஸ் தி பிளேஸ்' சமூக மன்றத்தின் நான்காவது மாடியில் செயல்படுகிறது. பச்சை அகற்று தலைத் தவிர இதர சேவைகளை இலவசமாகப் பெறலாம்.
உட்லண்ட்ஸ், மார்சிலிங், அட்மிரல்டி ஆகிய பகுதிகளில் வசிப்போருக்குப் புதிய நிலையம் உதவும் என்றும் போதைப் பழக்கத்தைக் கைவிட்டு திருந்திவாழ முயல்வோருக்கு உதவுவதில் இந்த முயற்சிகள் முக்கியமானவை என்றும் இணைப் பேராசிரியருமான ஃபைசல் கூறினார்.
மோசடி தவிர்ப்பு: அமேசான், லசாடா, Qoo10 முதலிடம்
சிங்கப்பூரில் இணைய மோசடிகளைத் தடுப்பதற்காக பல அமைச்சுகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அமைச்சுகள்நிலைக் குழு 'பரிவர்த்தனை பாதுகாப்புத் தரவரிசை' என்ற இணையச் சந்தை புதிய தரவரிசை முறையைத் தொடங்கி இருக்கிறது.
அது அமேசான், லசாடா, Qoo10 ஆகியவற்றை மோசடிகளுக்கு எதிரான ஆக அதிக பாதுகாப்பு உள்ள தளங்களாக வரிசைப்படுத்தி உள்ளது. இவை நான்கு குறியீடுகளைப் பெற்றன.
அதேவேளையில், ஃபேஸ்புக், மார்க்கெட்பிளேஸ் ஆகியவை பட்டியலில் ஒரே ஒரு குறியீட்டுடன் ஆகக் கடைசியில் இருக்கின்றன. ஷோப்பி, கரோசெல் ஆகியவை முறையே மூன்று, இரண்டு குறியீடுகளைப் பெற்றுள்ளன.
விசாரணையில் 306 பேர்
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு தரைப் பிரிவு காவல்துறை அதிகாரிகளும் ஏப்ரல் 29ஆம் தேதிக்கும் மே13ஆம் தேதிக்கும் இடையில் எடுத்த இரு வாரகால நடவடிக்கையின் விளைவாக 306 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தச் சந்தேகப்பேர்வழிகள் 941க்கும் மேற்பட்ட $6.4 மில்லியன் மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 115 பேர் ஆண்கள். 191 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 15 முதல் 74 வரை என்றும் காவல்துறை தெரிவித்தது.

