வல்லுநர்கள்: மருத்துவமனைகளுக்கும் சுமை ஏற்படலாம் என்பதால் அலட்சியம் கூடாது
டெங்கிக் காய்ச்சல் அடுத்த கொவிட்-19 தொற்று அளவுக்கு மிரட்டலாக இருக்காது என்றாலும்கூட அதை அலட்சியமாகக் கருதக் கூடாது என்று வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
டெங்கிக் காய்ச்சல் பலரையும் கொன்றுவிடக்கூடும். மருத்துவமனைகளுக்கும் பொருளியலுக்கும் அதனால் சுமை ஏற்படக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
டெங்கிக் காய்ச்சலின் தன்மை வேறுபட்டு இருக்கும் என்பதால் கொவிட்-19 அளவுக்குப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்பதை அவர்கள் சுட்டினர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 8,500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்ற ஆண்டு முழுவதற்கும் கூட இந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கிக் காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் திரும்பத் திரும்ப மக்களை கேட்டுக்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டில் டெங்கி இங்கு பெரும் தொற்றாக தலைதூக்கலாம் என்ற நிலை இருக்கிறது.
டெங்கி பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக், கொவிட்-19 அளவுக்கு டெங்கிக்குப் பரந்த அளவிலான கட்டுப்பாடுகள் தேவைப்படாது என்று குறிப்பிட்டார்.
கொசுக்கடி மூலமே டெங்கி பரவும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை எடுத்து டெங்கிக் கொசு இனப்பெருக்கத்தை ஒடுக்கிவிடலாம் என்று அவர் தெரிவித்தார்.
டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ருக்லாந்தி டி ஆல்விஸ் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டார்.
டெங்கிக் காய்ச்சல் மூன்று வழிகளில் சிங்கப்பூர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் குக் குறிப்பிட்டார். டெங்கிக் காய்ச்சல் நோயாளிகள் சிலரை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டி இருக்கும். தொற்று அதிகமாகும்போது மருத்துவமனைகள் வழக்கமாகச் செயல்பட முடியாத சூழல் வரலாம்.
டெங்கிக் காய்ச்சல் கடுமையான ஒன்று. ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை வரும். அல்லது தங்கள் குடும்பங்களுக்கு மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளைக் காண வேண்டிய சூழல் ஏற்படலாம்.
டெங்கிக் காய்ச்சல் காரணமாக பொருளியல் பாதிப்பும் ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
டெங்கிக் காரணமாக ஆண்டு ஒன்றில் பொருளியலுக்கு $100 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை இழப்பு ஏற்படக்கூடும் என்பது அண்மையில் ஓர் ஆய்வு மூலம் தெரியவந்து இருப்பதை இவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் டெங்கிக் கொசுவைச் சுத்தமாக துடைத்தொழிக்க முடியாதது ஏன் என்பது பற்றி கருத்து கூறிய இந்த இரண்டு வல்லுநர்கள், உண்மையிலேயே பார்க்கப்போனால் சிங்கப்பூர் மிக அருமையாகச் செயல்பட்டு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
டெங்கியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூன்று காரியங்களைச் செய்ய முடியும் என்றும் பேராசிரியர் குக் குறிப்பிட்டார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் MyEnv என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன்மூலம் அருகே தலைதூக்கியுள்ள டெங்கிக் காய்ச்சல் பற்றி விழிப்பூட்டலாம்.
வீட்டில் கொசு நுழையாமல் தடுக்க சன்னல்களில் வலையை பொருத்தலாம். பக்கத்தில் டெங்கிக் காய்ச்சல் பரவி இருந்தால் உடலை மறைக்கும் முழுக்கை, முழுகால் சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
வீட்டில் இடுக்கு முடுக்கான, இருட்டான இடங்களில் மருந்தடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். டெங்கி என்பது நம்முடைய பழைய எதிரி என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
டெங்கிக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு புதிய உருமாறிய கிருமிகளை உருவாக்கக்கூடும்.
ஆகையால் எப்போதும் மக்கள் விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்று டாக்டர் டி ஆல்விஸ் வலி யுறுத்தினார்.

