ஹர்ஷிதா பாலாஜி
பெளத்த சமயத்தினர் மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக நேற்று நேரடியாகக் கலந்துகொண்டு விசாக தினத்தை கொண்டாடினர். ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் பல பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்டனர்.
என்றாலும் கொவிட்-19க்கு முந்திய விசாக தின வழிபாட்டில் இருந்து இந்த ஆண்டு வழிபாடு கொஞ்சம் மாறி இருந்தது.
கொவிட்-19 தொற்றை நினைத்து பலரும் முன்னெச்சரிக்கையுடன் வழிபட்டனர்.
எடுத்துக்காட்டாக தெக்சன் சூலிங் பௌத்த ஆலயத்தில் புத்தர் சிலையில் நீர் ஊற்றி வழிபட போத்தல் தண்ணீர் கொடுக்கப்பட்டது. முன்பு வாளியில் இருக்கும் தண்ணீரை பக்தர்கள் பயன்படுத்துவார்கள். மற்றபடி வழிபாடுகள் நேற்று சிறப்பாக நடந்தன.
"ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் விசாக தினத்தன்று சாக்கியமுனி ஆலயத்துக்கு வருவேன்.
ஆனால் கடந்த ஈராண்டுகளாக கொவிட்-19 கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் என்னால் வரமுடியவில்லை. இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் மனநிறைவுடன் வழிபாடு செய்ய முடிந்தது." என்று திருவாட்டி மகேஸ்வரி, 49, தெரிவித்தார்.
அதே சாலையில் அமைந்துள்ள மற்றொரு பௌத்த ஆலயமான லியோங் சான் சீ ஆலயத்துக்கும் பல பக்தர்கள் வந்தனர். 1913ஆம் ஆண்டில் தோற்றம் கண்ட இவ்வாலயத்தில் அனைத்து புத்தர்களின் கருணை வடிவமாக சித்தரிக்கப்படும் குவான் யின்/அவலோதிகரை பிரதான தெய்வமாக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
"சிங்கப்பூரில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதால் அனைத்து சமயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.
"இவ்வாலயத்துக்கு வரும் முன் சாக்கியமுனி புத்த காய ஆலயத்திலும் வழிபாடு செய்துவிட்டு வந்தேன். என்னால் முடிந்தால் ஒவ்வோர் ஆண்டும் வருவேன்" என்றார் டிசிஎஸ் நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரியும் திரு பெரியகருப்பன் கண்ணப்பன், 58.
அதேபோல, செயின்ட் மைக்கல் சாலையில் ஸ்ரீ லங்க ராமாயா ஆலயத்தில் கூடிய பக்தர்கள் புத்தரின் சிலைகளுக்கு முன் பூக்களையும் விளக்குகளையும் வைத்து வேண்டினர். குறிப்பாக, பல புத்த ஆலயங்களில் காணப்படும் புனித போதி மரத்தைச் சுற்றி இருந்த நான்கு புத்தர் சிலைகளுக்குத் தங்கள் காணிக்கைகளை வழங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சிறு வயதிலிருந்தே சாக்கியமுனி புத்த காய ஆலயத்துக்கு சென்று வரும் எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் மூத்த தளவாட உதவியாளராக பணிபுரியும் 52 வயது திரு அசோக் குமார், அண்மைய காலமாக ஸ்ரீ லங்க ராமாயா ஆலயத்திலும் வழிபட்டு வருகிறார்.
அங்கு வழங்கப்படும் ஆசிர்வதிக்கப்பட்ட கயிற்றைப் பெற்று நல்லாசி பெறுவதற்காக இந்த ஆலயத்திற்கு இவர் சென்று இருந்தார்.