பங்குச்சந்தை பட்டியலில் இருந்து எஸ்பிஎச் அதிகாரபூர்வமாக நீக்கம்
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் 38 ஆண்டு காலம் பட்டியலிடப்பட்டு இருந்த சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் அந்தப் பட்டியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலக்கப்பட்டுவிட்டது.
அது, கஸ்கேடன் பீக் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான முதலீட்டு நிறுவனமாக ஆகி இருக்கிறது.
எஸ்பிஎச் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இங் யாட் சுங் இன்று அந்தப் பதவியில் இருந்து விலகுவார். அவரோடு இப்போதைய இயக்குநர்களும் விலகி விடுவார்கள். புதிய நிர்வாக சபை அமைக்கப்படும்.
எஸ்பிஎச் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இன்று முதல் ஜெரால்டு யோங் நியமிக்கப்படுவார் என்று எஸ்பிஎச் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் திரு இங் தெரிவித்து இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
கஸ்கேடன் பீக் நிறுவனத்தின் தலைவரான கிறிஸ்டோபர் லிம், எஸ்பிஎச் புதிய நிர்வாக சபைக்குத் தலைவராக இருப்பார் என்றும் திரு இங் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களால் பாதுகாவல் துறையில் வேலை வாய்ப்புகள்
பாதுகாவல் தொழில்துறையில் ஏராளமான புதுப்புது தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதன் காரணமாக நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளும் வாழ்க்கைத் தொழில்களும் உருவாகின்றன.
அந்தத் துறையில் சாதாரண நிலை ஊழியர்களுக்குக் கூட 2028ல் குறைந்தபட்ச அடிப்படை மாதச் சம்பளம் $3,530 ஆக இருக்கும். பாதுகாவல் தொழில்துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீவ் டான், இந்தத் தொழில்துறையில் வேலை வாய்ப்புகள் மிகவும் பன்மயமாகி வருகின்றன என்று கூறினார்.
இந்தத் துறையில் வேலை பார்ப்பவர்கள் வெறும் பாதுகாவல் அதிகாரிகள் மட்டுமல்ல, புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளக்கூடிய பாதுகாவல் துறை தொழில்நுட்ப நிபுணர்களாகவும் திகழ்கிறார்கள் என்று திரு டான் கூறினார்.
இந்தத் துறை ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதனால் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நிலவரப்படி 265 பாதுகாவல் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 40,000 சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் பாதுகாவல் அதிகாரிகளாக வேலையில் அமர்த்தி இருந்தன.
வேலையிட மரணங்கள்: வல்லுநர்கள் கருத்து
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இதுவரையில் 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. 2016க்குப் பிறகு இந்தக் காலகட்டத்தில் இந்த அளவுக்கு இதற்கு முன் வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததில்லை.
ஊழியர்கள் பற்றாக்குறை, தாமதமான திட்டங்களை வேகமாக முடித்து கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி, பொருத்தமான ஆற்றல் போதிய அளவுக்கு இல்லாமல் இருப்பது ஆகியவை அதிக விபத்துகளுக்கான காரணங்களாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக பார்க்கப்போனால், பொருளியல் மீட்சியடையும்போது அல்லது விரிவடையும்போது விபத்துகள் அதிகமாக நிகழக்கூடிய ஒரு போக்கு காணப்படுவதுண்டு என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கட்டட சுற்றுசூழல் துறையைச் சேர்ந்த பாதுகாப்பு மீள்திறன் ஆய்வுப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் கோ யாங் மியாங் கூறினார்.
வேலையிட விபத்துகளைத் தவிர்ப்பதற்காக மனிதவள அமைச்சு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 1,700 சோதனைகளை நடத்தி இருக்கிறது.
அமைச்சு, சென்ற மாதம் 15 வேலை நிறுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தது. 150 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. 700 நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகளையும் பிறப்பித்தது.
ஃபார்முலா ஒன் கார் பந்தயம்: எஸ்ஐஏ பொறுப்பாதரவு தொடரும்
ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் அதிவேக கார் பந்தயத்தின் பொறுப்பாதரவாளராக தொடர்ந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இருக்கும்.
அந்தப் புதிய உடன்பாடு, இந்த ஆண்டு பந்தயத்தில் இருந்து தொடங்கும். கொவிட்-19 காரணமாக இரண்டாண்டுகள் தடைபட்டு இருந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம் இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்க இருக்கிறது.
அந்தப் பந்தயத்தைச் சிங்கப்பூர்வாசிகளும் வருகையாளர்களும் மிகவும் மனமுவந்து வரவேற்பார்கள்.
உலக நகரம் என்ற சிங்கப்பூரின் புகழ் மேலும் மேம்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் லீ லிக் ஷின் கூறினார்.
எஸ்ஐஏ நிறுவனம் சுற்றுலாவுக்கும் விளையாட்டுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இந்தப் பொறுப்பாதரவு அடையாளமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

