மாதங்கி இளங்கோவன்
வாழ்க்கையில் சாதனை புரிய மனதில் உறுதியும் செயலில் கடும் உழைப்பும் இருந்தால் போதும் என நிரூபித்துள்ளார் வள்ளியம்மை லெட்சுமணன், 22, (படம்).
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற இவர், கல்வியில் சிறந்து விளங்கி பல்வேறு நடவடிக்கைகளில் முழு மனதோடு ஈடுபட்டதன் பலனாக, லீ கொங் சியன் விருதைப் வென்றுள்ளார். ஆனால், இந்த நிலையை எட்டுவதற்கு கடினமான முடிவு ஒன்றை இவர் எடுக்க வேண்டியிருந்தது.
இவரது கல்விப் பயணம் வழக்கத்திற்கு மாறானது. வழக்கநிலைத் தேர்வில் நன்றாக செய்திருந்தாலும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமக்குப் பிடித்தமான கணக்கியல் பாடத்தைப் படிக்கத் தேவையான மதிப்பெண்களை இவர் பெறவில்லை. சாதாரண நிலைத் தேர்வை எழுத பலரும் இவரை ஊக்குவித்தனர். வேறு சிலரோ, பலதுறைத் தொழிற்கல்லூரியில் வேறொரு பாடப்பிரிவில் சேர இவருக்கு ஆலோசனை கூறினர்.
வள்ளியம்மை எடுத்த முடிவோ இவருடைய நண்பர்களையும் குடும்பத்தாரையும் ஆச்சரியப்பட வைத்தது. யாருடைய அறிவுரையையும் கேட்காமல் தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் சேர்ந்து கணக்கியல் பாடத்தில் உயர் நைட்டெக் படிப்பை இவர் மேற்கொண்டார்.
எதிர்காலத்தில் கணக்கியல் துறையில்தான் பணிபுரிவோம் என்ற நம்பிக்கை இருந்ததால் தம் கனவுகளை நனவாக்க உத்வேகத்துடன் இவர் படித்தார். 'சிஜிபிஏ' மதிப்பெண் முறையில் 3.94 புள்ளிகளைப் பெற்ற இவர், தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வங்கி, நிதித் துறையில் சேர்ந்தார்.
நிதித் துறையில் அதிக ஆர்வம் காட்டும் வள்ளியம்மை, படிப்பில் மட்டும் மேதையாக இருந்தால் போதாது, வெவ்வேறு இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியம் என்று எண்ணினார்.
தமது உயர்வில் மட்டும் கவனம் செலுத்துவதுடன் நிறுத்திவிடாமல் சமுதாயத்திற்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த வள்ளியம்மை, இரு இணைப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தம் பள்ளியின் சமூகச் சேவை அமைப்பின் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பது, விளையாட்டு மூலம் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது என ஒன்றரை ஆண்டுக்கு சிறுவர்களுக்கு வழிக்காட்டியாக இவர் திகழ்ந்தார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல், நிதி ஆர்வலர்கள் குழுவிலும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தினார். மாணவர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மிக அவசியமான ஒன்று என நம்பும் வள்ளி, அவர்களுக்கான பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்தார்.
இவ்வாறு பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்த வள்ளி யம்மையின் வாழ்க்கையில் சவால்களும் தியாகங்களும் நிறைந்திருந்தன.
"நான் முட்டாள்தனமாக முடிவெடுப்பதாக பலரும் என்னைத் தட்டிக்கழித்தனர், வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று கேலி செய்தனர். ஆனால், அவர்களுடைய வார்த்தைகள் என்னைப் புண்படுத்தவில்லை. என்னால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்ற வெறித்தான் கூடியது," என்றார் இவர்.
மக்களின் கருத்துகள் ஒருபுறமிருக்க, கொவிட்-19 சூழலில் பள்ளியில் நேரடி வகுப்புகளுக்குச் செல்லமுடியாதது இவருக்கு சவாலாக அமைந்தது. ஆசிரியர்களிடம் உடனடியாகக் கேள்விகளைக் கேட்டுப் பழகியதாலும் நண்பர்களோடு சேர்ந்து படிப்பதை விரும்பியதாலும் வீட்டிலிருந்து கற்பது இவருக்குச் சற்று கடினமான அனுபவமாக அமைந்தது.
வகுப்புகளுக்கும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் இடையிலான நேரத்தில் தம்முடைய குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கவும் பழைய நண்பர்களோடு வெளியே செல்லவும் முடியவில்லை. இருப்பினும், இவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் ஆதரவளித்து இவருடைய முயற்சிகளைப் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தனர்.
சுய முயற்சி, குடும்ப ஆதரவு, ஆசிரியர்களின் உந்துதல், நண்பர்களின் உதவி என பலரும் வள்ளியின் வெற்றிக்கு வெவ்வேறு விதங்களில் பங்களித்துள்ளனர். எர்னஸ் அண்ட் யங் நிறுவனத்தில் தணிக்கையாளராகப் பயிற்சி வேலை செய்யும் இவர், பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் படித்து வங்கி, நிதித்துறையில் சேர விரும்புகிறார்.
சாமர்த்தியமாக உழைப்பதன் பலனை இளையர்களிடம் நிரூபிக்கும் வள்ளி, லீ கொங் சியன் விருதை பெற்றதோடு $1,000 ரொக்கத்தையும் வென்றுள்ளார்.

