கொவிட்-19 பெருந்தொற்றின் முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டு அதிகமான மூத்தோர் சமூக நல முகவைகள் இயக்கும் உதவி அழைப்பு எண்களுக்கு அழைத்து உதவி நாடியுள்ளனர்.பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சோர்வு, நிலைத்தன்மையின்மை காரணங்களால் உதவி எண்களை அவர்கள் அழைத்துள்ளனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள், இதனால் ஏற்படும் நீண்டகால விளைவுகள், அதனைக் கையாள்வதால் ஏற்படும் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்காக தங்களை அந்த மூத்தோர் அழைத்தனர் என்று அந்த முகவைகள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.
மூத்தோருக்காக ஆலோசனை சேவைகளையும் அவசர எண் சேவைகளையும் இயக்கும் 'சேஜ் கவுன்சலிங்' நிலையம் கடந்த 2005 முதல் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 11,912 அழைப்புகள் வந்தன என்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் 10,365 அழைப்புகளை தாங்கள் கையாண்டதாகவும் நிலையம் கூறியது. இது 15% அதிகம்.
2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொற்றுநோய் பரவியநிலையில், பெரும்பாலான முதியவர்கள் 2021ஆம் ஆண்டும் தொடர்ந்து குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே இருந்தனர் என்றார் 'சேஜ் கவுன்சிலிங் சென்டரி'ன் நிர்வாக இயக்குநர் திருமதி கிரேஸ் லீ.
"பல முதியவர்களுக்கு தனியாக வாழ்வதால் சோர்வு ஏற்பட்டது; அதனால் கவலையும் பயமும் அதிகரித்ததுடன் தொற்றுநோய் எவ்வளவு காலம் நீடிக்கும் நிச்சயமற்ற நிலையை உணர்ந்தவர்களாக இருந்தனர்," என்று அவர் கூறினார்.
"சிலர் முன்பைவிட அடிக்கடி எங்களை அழைப்பதைக் கவனித்தோம், வீட்டில் தனியாக இருப்பதால் தங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்று தெரியாமல் தவித்தனர்," என்றும் சொன்னார்.
இருப்பினும் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு ஏப்ரல் 26 முதல் எந்த குழு அளவிலான கட்டுப்பாடும் இல்லாமல் சிங்கப்பூரர்கள் ஒன்றுகூட வழிபிறந்தது. வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் ஆக்கப்படவில்லை.
சில்வர் ரிப்பன் அமைப்புக்கு அழைக்கும் மூத்தோரின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது. 'டச்' சமூக சேவைகள் அமைப்பு 9% அழைப்பு அதிகரிப்பைக் கண்டது.
'டச்' சமூக சேவைகள் அமைப்பு மூத்தோருக்கும் இதர பிரிவினருக்கும் சேவை ஆற்றுகிறது. சில்வர் ரிப்பன் அமைப்பு மனநல பிரச்சினை உடையோருக்கு இலவச ஆலோசனை வழங்குகிறது.

