மென்பொருள் நிறுவனமான ஒர்க்டே அதன் 130 ஊழியர்களை மே முதல் வாரத்தில் விருந்துபசரிப்பு வரவேற்றது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் 'மகிழ் நேர'த்தையும் தொடங்கியதுள்ளது. ஏப்ரல் மாதம் முழுவதும் அலுவலகத்திற்குத் திரும்பிய ஊழியர்களுக்கு இலவச மதிய உணவையும் நிறுவனம் வழங்கியது.
இந்த முயற்சிகள் ஊழியர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதுடன் பணியிடத்தில் நேர்மறையான அனுபவங்களை உருவாக்கும் என்று இந்த அமெரிக்க நிறுவனம் நம்புகிறது. அதே நேரத்தில் ஊழியர்களிடையே பிணைப்பை வளர்ப்பதற்கும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார் நிறுவனத்தின் ஆசியா பிரிவின் தலைவர் திரு சந்தீப் சர்மா.
ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைப்பது பற்றியும் அதே நேரத்தில் தொற்றுநோய் பரவலால் ஏற்படுத்தப்பட்ட நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நிரந்தரமாக்குவதையும் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
ஏப்ரல் 26ஆம் தேதி முதல் பணியிடங்களில் ஊழியர் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு சிங்கப்பூர் திரும்பியபோதும் இங்கு பணி வாழ்க்கைக்கான வழிமுறைகள் சூழலுக்கு ஏற்றவாறு இன்னமும் வகுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் பணிபுரியும் மலேசிய வங்கி யான சிஐபிஎம், ராஃபிள்ஸ் பிளேஸ், சாங்கி வர்த்தகப் பூங்கா ஆகிய இரு அலுவலகங்களிலும் தொழிலாளர் தினம், நோன்புப் பெருநாளைக் கொண்டாட மே 6ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்வில் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவேற்றது.
வங்கி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையில் காலை உணவையும் விளையாட்டுகளையும் ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்வதாக வங்கியின் சிங்கப்பூர் பிரிவுக்கான மனிதவளத் தலைவர் ஜெய்ம் ரொசாரியோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சொத்து சந்தை நிறுவனமான கூகோலேண்ட் தொற்றுநோய் பரவலுக்கு முன்பு இருந்த பழ விநியோகத் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேம்படுத்த ஊழியர்களுக்கு ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களை மாதம் ஒருமுறை நிறுவனம் வழங்குகிறது.
ஒரு சொத்து உரிமையாளராக, கூகோலேண்ட் அதன் குத்தகைதாரர்களும் அலுவலகத்திற்குத் திரும்புவதை எளிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தஞ்சோங் பகாரில் உள்ள கூகோ டவரில், அலுவலக ஊழியர்களுக்காக வாரம் இருமுறை உடற்பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளது.
ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு ஈர்க்க விருந்துகள், நிகழ்ச்சிகள் மூலம் முயற்சிப்பதன் வழி நிறுவனங்கள் தங்கள் வளங்களை திறம்பட பயன்படுத்தாமல் போகக்கூடும் என்றார் நெக்ஸ்ட் (NeXT) வேலைவாய்ப்பு ஆலோசனைக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு பால் ஹெங்,
"விருந்தின் மூலம் ஊழியர்களை ஈர்க்க வாய்ப்பில்லை. மாற்றங்கள், மாறுபட்டு செய்ய வேண்டியவை, முன்னேறுவதற்கு கவனம் செலுத்த வேண்டியவை குறித்து முதலாளிகள் யதார்த்தமாக யோசிக்க வேண்டிய நேரம் இது," என்றார் அவர்.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் எத்தகைய வேலை ஏற்பாடுகளை விரும்புகிறார்கள் அல்லது சலுகைகள் எப்படி இருக்கலாம் என்பது பற்றி, உதாரணமாக வீட்டுக்கு வசதியான நாற்காலி வாங்க மானியம் கொடுப்பது போன்றவவை மறுபரிசீலனை செய்ய வளங்களை செலவழிக்க வேண்டும் என்றும் திரு பால் கூறினார்.

