சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
அண்மைய ஆண்டுகளாக தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம், மருத்துவ தகவல்களை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்படும்.
எனினும், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவது அறிவியலாளர்களுக்கு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், இதில் இயந்திரங்கள் கடந்தகால தரவுகளைக் கொண்டு அவை தாங்களே சுயமாக முடிவெடுக்கும். இதனால் நோயின் போக்குகளைக் கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் அறிவியலாளர்களுக்கு புரியாமல் போகலாம்.
இதுபோன்ற சூழல்களில்தான் பேராசிரியர் லுக் ஓங் ஆய்வு மேற்கொண்டுள்ள சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கருவிகள் உதவும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் புதிய ஓமிக்ரான் திரிபுகள்
உலகம் எங்கும் மீண்டும் கொவிட்-19 தொற்று உயரக் காரணமாக இருக்கும் புதிய ஓமிக்ரான் திரிபுகள் சிங்கப்பூரில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிஏ.4 திரிபு தொற்றிய இரண்டு சம்பவங்களும் பிஏ.5 திரிபு தொற்றிய ஒரு சம்பவமும் கண்காணிப்பின் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தது. அந்தச் சம்பவங்கள் பிசிஆர் சோதனைகள் வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மரபணுக்களை வரிசைப்படுத்தி உறுதி செய்யப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
திரிபுகள் தொற்றிய மூன்று பேருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது லேசான அறிகுறிகள் இருந்தன. அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மூவரும் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள். அவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டிருந்தனர். கொவிட்-19 தொற்றிய பின்னர் அவர்கள் மூன்று பேரும் தங்களைத் தனிமைப்படுத்தியதாகவும் தொற்று அபாயமிக்க சூழல்களுக்கு அவர்கள் செல்லவில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
உள்ளூரில் கண்காணிப்பை அதிகரிப்போம். சிங்கப்பூரில் பிஏ.2, பிஏ5 கிருமித் திரிபுகளின் பரவலைத் தொடர்ந்து கண்காணிப்போம்," என்று அமைச்சு கூறியது.
பரிந்துரைக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்படியும் பலர் கூடியிருக்கும் இடங்களில் கவனமாக இருக்கும்படியும் அமைச்சு மக்களுக்கு, குறிப்பாக கிருமி தொற்றினால் உடல்நிலச் சிக்கல் ஏற்படக் கூடியவர்களுக்கு வலியுறுத்தியது.
ஷேக் கலீஃபா இறுதிச் சடங்கில் அதிபர் ஹலிமா யாக்கோப்
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் கலீஃபா சையது அல்-நஹ்யானின் இறுதிச் சடங்கில், அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பார். அதிபருடன், வெளி யுறவு இரண்டாம் அமைச்சரும் கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான டாக்டர் முகமது மலிக்கி ஒஸ்மான் அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. 73 வயது ஷேக் கலீஃபா வெள்ளிக்கிழமை காலமானார்.
திருவாட்டி ஹலிமா நாட்டில் இல்லாத சமயத்தில் அதிபர் ஆலோசகர் மன்றத் தலைவர் எடி தியோ அதிபரின் பணிகளை மேற்கொள்வார்.
அமைச்சர்கள் லாரன்ஸ், விவியன் வெளிநாடு பயணம்
நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், இன்று முதல் வெள்ளி வரை இந்தோனீசியாவின் ஜகார்த்தா, மத்திய ஜாவா பகுதிகளுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின்போது, அவர் பல அமைச்சர்கள் வட்டாரத் தலைவர்களை சந்திப்பார் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
மலேசியத் தலைவர்களுடனான இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று முதல் வியாழன் வரை மலேசியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். மலேயாவின் மூத்த அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான ஹிஷாமுதீன் உசேன், வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா ஆகியோருடன் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் பலரையும் டாக்டர் விவியன் சந்திப்பார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. அமைச்சர் விவியன், மலேசியாவின் துணை மன்னரும் பேராக் சுல்தானுமான சுல்தான் நஸ்ரின் ஷாவையும் சந்திப்பார்.

