சமயம், இனம் குறித்த தகாத கருத்துகளைத் தெரிவித்ததாக முன்னாள் விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

சமயம், இனம் குறித்த தகாத கருத்துகளைத் தெரிவித்ததாக முன்னாள் விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

2 mins read
841878a6-48f1-4e56-8f5c-101316bf3639
-

சமயம், இனம் குறித்த தகாத கருத்துகளைத் தெரிவித்ததாக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் டான் பூன் லீ,61, மீது இன்று (மே 17) குற்றம் சுமத்தப்பட்டது.

இனவாதக் கருத்துகளைத் தெரிவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் சமயம் தொடர்பான தகாத கருத்துகளைத் தெரிவித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.

டான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குல்லியா பார்க் வட்டாரத்தில், 26 வயது டேவ் பிரகாஷ் எனும் இந்திய ஆடவரிடம் இனவாதக் கருத்துகளைக் கூறியுள்ளார். அப்போது அவர் தமது சீனக் காதலியுடன் இருந்தார்.

''சரி நீ இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை. நீ சிங்கப்பூரில் வசிப்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. உனக்கு எதிராக எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் நீ சீனப் பெண்களுக்கு வலை விரிக்கிறாய், அது சீனர்களுக்குப் பிடிக்காது,' என்று பிரகாஷிடம் டான் அப்போது கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் அப்போது பரவலாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து டான் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இஸ்லாம் சமயம் பற்றி இடம்பெற்ற விரிவுரையின்போது மனத்தைப் புண்படுத்தக்கூடிய கருத்துகளை முன்வைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட இணையக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு சமயம் பற்றித் தகாத பதில்களைச் சொன்னதாக அவர் மீது மேலும் ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியில் 64 ஆபாசக் காணொளிகள் வைத்திருந்ததாக டான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். மொத்தமாக அவர் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

சிங்கப்பூரின் இன, வேண்டுமென்றே சமய நல்லிணக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைப் புரிவதையோ கருத்துகளை முன்வைப்பதையோ சகித்துக்கொள்ள முடியாது என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேண்டுமென்றே இன ரீதியாகப் புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

டானுக்கு 5,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டது. அவர் ஜூன் 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.