ஐக்கிய அரபு சிற்றரசுகளின் முன்னாள் அதிபர் ஷெய்க் கலிஃபா பின் சயெத் அல் நஹ்யானின் மறைவு குறித்து அதிபர் ஹலிமா யாக்கோப் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளரான ஷெய்க் முகம்மது பின் சயெத் அல் நயானிடம் திருவாட்டி ஹலிமா அதனைத் தெரிவித்தார்.
73 ஆம் வயதில் காலமான ஷெய்க் கலிஃபா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதாகவும் அவரது மறைவு மக்களுக்கு பேரிழப்பாக இருக்கும் என்று அபுதாபியில் இருந்த அதிபர் ஹலிமா கூறினார்.
"இவரது ஆட்சியில் ஐக்கிய அரபு சிற்றசு வளப்பம் பெற்று நிதனமாக மேம்பட்டது," என்று அவர் தம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் அமரர் எஸ் ஆர் நாதன் அந்நாட்டுக்கு அதிகாரபூர்வம் பயணம் மேற்கொண்டதையும் அன்று முதல் இருநாட்டு உறவுகள் வலுப்பெற்றதையும் அவர் சுட்டினார். ஷெய்க் முகம்மதின் தேர்தல் வெற்றியையும் பாராட்டிய அதிபர், அவர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது தாம் அவரை உபசரித்ததையும் தம் பதிவில் குறிப்பிட்டார்.

