சிங்கப்பூர் ஆயுதப் படை அமைக்கும் மின்னிலக்க, உளவுச் சேவை
அதிகரித்துவரும் மின்னிலக்க மிரட்டல்களில் இருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க, மின்னிலக்க, உளவுச் சேவையை சிங்கப்பூர் ஆயுதப் படை அமைக்கும் வேளையில் எஸ்டோனியா, லாட்வியா நாடுகளிடமிருந்து அதன் தொடர்பான உத்திகளை அது கற்றுக்கொள்ள இருக்கிறது.
பணிநிமித்தமாக அவ்விரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், லாட்வியா தலைநகர் ரிகாவிலிருந்து பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
ராணுவம், கடற்படை, ஆகாயப் படைக்கு அடுத்ததாக சிங்கப்பூர் ஆயுதப் படையின் நான்காவது சேவைப் பிரிவாக மின்னிலக்க, உளவுச் சேவையை அமைக்கும் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில், எஸ்டோனியா, லாட்வியா நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட பயணம் பயன் தரும் விதமாக அமைந்துள்ளதாக டாக்டர் இங் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் வரவுசெலவுத் திட்டம் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டு இருந்த மின்னிலக்க, உளவுச் சேவை, ஆண்டிறுதியில் அமைக்கப்படவுள்ளது.
உளவு, இணைய, உளவியல் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அச்சேவை, சிங்கப்பூர் ஆயுதப் படையைக் கட்டமைக்கப்பட்ட படையாக மேம்படுத்துவதிலும் பங்களிக்கும்.
ஆகாயம், நிலம், கடல் ஆகிய மூன்று நிலைகளில் எப்படி போர் தொடுக்கப்பட்டு வந்துள்ளதோ, அதேபோல தகவல், இணைய நிலைகளிலும் ராணுவத்தினர் போர் தொடுப்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக டாக்டர் இங் சொன்னார்.
"உக்ரேனில் உள்ள நிலவரம் உட்பட இதற்கு எங்களிடம் உதாரணங்கள் உள்ளன," என்று கூறிய அவர், இணையத் தாக்குதல், பகைமையான தகவல் பிரசாரங்கள் என வரும்போது எஸ்டோனியாவும் லாட்வியாவும் முதல்நிலை நாடுகளாக விளங்குகின்றன எனக் குறிப்பிட்டார்.
2007ஆம் ஆண்டு இணைய உலகில் எஸ்டோனியா தாக்குதலுக்கு இலக்கானதை நினைவுகூர்ந்த அவர், "இதனாலேயே அவை தங்களது ஆற்றல்களை மேம்படுத்தி வருகின்றன," என்றார்.
நேட்டோ கூட்டணியின் கூட்டு இணைப் பாதுகாப்பு உன்னத மையம் எஸ்டோனியாவிலும் நேட்டோவின் உத்திபூர்வ தொடர்பு உன்னத மையம் லாட்வியாவிலும் அமைந்திருப்பதை டாக்டர் இங் சுட்டினார்.
"எனவே, அவற்றை நாங்கள் (சிங்கப்பூர் ஆயுதப் படையும் தற்காப்பு அமைச்சும்) ஈடுபடுத்தி வருகிறோம். அதற்கு தகுந்தாற்போல முன்னேற்ற அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்," என்றார் அவர்.
டாக்டர் இங்கின் இந்த ஆறு நாள் பயணம், கடந்த வியாழக்கிழமை எஸ்டோனியாவில் தொடங்கியது.

