சிங்கப்பூரர்கள் சிலர் தங்களுடைய வெளிநாட்டுப் பயணத் திட்டங்களை ஆண்டிறுதி வரை தள்ளிவைக்கின்றனர். உலகம் முழுவதும் அப்போது கொவிட்-19 தொற்று இன்னும் குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.
பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும், பெருந்தொற்றுச் சூழலில் பயணம் மேற்கொள்வதில் இங்குள்ள சிலருக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று பயண முகவைகள் தெரிவித்து உள்ளன.
ஜப்பான் போன்று சில நாடுகளில் இன்னும் பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால், ஆண்டிறுதிக்குள் அவை தளர்த்தப்பட்டவுடன் பிறகு பயணம் செய்யலாம் என சிலர் எண்ணுகின்றனர்.
பயணத் தொகுப்புத் திட்டங்களுக்கான தற்போதைய தேவை இன்னும் குறைவாகவே இருப்பதாக 'நம் ஹோ டிராவல்' பயண முகவை இயக்குநர் மார்ஷல் வீ கூறினார். தற்போது பயண முன்பதிவுகள், கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் ஏறக்குறைய 20 விழுக்காடாக இருப்பதாக அவர் சொன்னார்.
"சில நாடுகளில் புதிய கொவிட்-19 திரிபு அல்லது தொற்று அலை எழுமோ என்ற அச்சம் சில சிங்கப்பூரர்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவ்வாறு ஏற்பட்டு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், தங்களது பயண ஏற்பாடுகள் பாதிப்படையுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கக்கூடும்," என்றார் திரு வீ.
மக்கள் அதிகம் பயணம் செய்யும் இரு பருவங்களில் அரையாண்டு பருவமும் ஒன்று. மே 28 முதல் ஜூன் 26ஆம் தேதிவரை இங்குள்ள பள்ளிகளுக்கு ஒரு மாதகாலம் விடுமுறை அளிக்கப்படும்.
என்றாலும், இளம் பிள்ளைகள் உடைய குடும்பங்கள் இப்போதைக்குப் பயணம் செய்வதில் தயக்கம் காட்டக்கூடும்.
'சிடிசி டிராவல்' பயண முகவையின் சந்தைப்படுத்துதல் பிரிவு நிர்வாகியான திருமதி கெலி டோ, "வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதைப் பெற்றோர் உறுதிசெய்ய விரும்புகின்றனர்," என்று கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலுடன் ஒப்புநோக்க, சிடிசி டிராவலுக்கு தற்போது கிடைத்துள்ள பயண முன்பதிவுகள் 20 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.
ஆண்டிறுதிக்குள் முன்பதிவுகள், கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 50 முதல் 60 விழுக்காட்டை எட்டும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

