அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிதியுதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள், 'காம்கேர்' குறுகியகாலம் முதல் நடுத்தரகால உதவித் திட்டத்திற்கு இனி https://go.gov.sg/smta எனும் இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுநாள் வரை இந்த உதவித் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள், இங்குள்ள 24 சமூக சேவை அலுவலகங்களில் ஒன்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இணையத்தில் விண்ணப்பங்களைச் செய்ய முடிவதால், விண்ணப்பதாரர்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்த முடிவதோடு அவர்களுக்கு சௌகரியமும் ஏற்படும் என்றார் அமைச்சர் மசகோஸ்.
'MyInfo' எனப்படும் அரசாங்கத்தின் தரவுத் தளத்தையும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்த முடியும். அதில் தங்களது தனிப்பட்ட விவரங்களை நிரப்பி, ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடிவதுடன், விண்ணப்ப நிலவரத்தையும் அவர்கள் கண்காணிக்க முடியும்.
இணையத்தில் விண்ணப்பிப்பதில் உதவி தேவைப்படுவோர் 1800-222-0000 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம், அல்லது Ask_SSO@msf.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள சமூக சேவை அலுவலகத்துக்கும் அவர்கள் செல்லலாம்.
'காம்கேர்' குறுகியகாலம் முதல் நடுத்தரகால உதவித் திட்டத்துக்கான இணைய விண்ணப்பங்கள் நடப்பு காலாண்டிற்குள் தொடங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு முன்னதாகத் தெரிவித்திருந்தது.
'காம்கேர்' உதவித் திட்டத்தின்கீழ், பயனாளர்களுக்கு மாதாந்திர ரொக்க உதவி, குடும்பச் செலவுகளுக்கு உதவி, பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களில் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த உதவி, வேலை நியமன உதவி போன்றவை வழங்கப்படலாம்.
தங்களுடைய குடும்ப உறுப்பினர்களில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருப்பாராயின், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் மாதக் குடும்ப வருமானம் $1,900 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தனிநபர் குடும்ப வருமானம் $650 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இதைவிட வருமானம் அதிகம் உடைய குடும்பங்களும் சமூக சேவை அலுவலகங்களுக்குச் சென்று உதவி நாடலாம்.

