செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f96c9801-45f4-4760-ad65-3e2c2d66e1d5
-

மின்னிலக்க கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்கள் அங்கீகாரம்

வரும் திங்கட்கிழமை (மே 23) முதல், சிங்கப்பூரும் ஆப்பிரிக்க ஒன்றியமும் ஒன்று மற்றொன்றின் மின்னிலக்க கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களை அங்கீகரிக்கத் தொடங்கும். இதன்மூலம், 55 உறுப்பு நாடுகள் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்துக்குப் பயணம் மேற்கொள்வது எளிதாகும்.

சிங்கப்பூரில் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், சுகாதார அமைச்சு வழங்கிய தங்கள் மின்னிலக்க தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தால் போதும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 'டிரஸ்டட் டிராவல்' மற்றும் 'டிரஸ்டட் வேக்சின்ஸ்' தளங்களில் தங்களது தடுப்பூசி நிலையைப் பயணிகள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்னிலக்கச் சான்றிதழுக்குச் சமமாக, சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

தற்போது எத்தியோப்பியா, நைஜீரியா, கானா, நமீபியா, கென்யா, ருவாண்டா உள்ளிட்ட 21 ஆப்பிரிக்க நாடுகள் 'டிரஸ்டட் டிராவல்', 'டிரஸ்டட் வேக்சின்ஸ்' தளங்களை ஏற்கெனவே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றன, அல்லது இவற்றில் ஒன்றும் சேருவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளன.

2020ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில், வரும் மாதங்களில் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்ப்பதற்கான திட்டங்கள் உள்ளன.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் ஏப்ரலில் தணிந்தன

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக கடந்த ஏப்ரலில் மெதுவாக வளர்ச்சி கண்டன. சீனாவில் கொவிட்-19 முடக்கநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு உணரப்படுகிறது.

பணவீக்கமும் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படுவதற்கான சாத்தியமும் அமெரிக்காவில் வளர்ச்சி வாய்ப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ரஷ்யா-உக்ரேன் பூசலும் சிங்கப்பூரின் ஏற்றுமதிகளுக்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் கடந்த ஏப்ரலில் ஆண்டு அடிப்படையில் 6.4 விழுக்காடு வளர்ச்சி கண்டன. மார்ச் மாதம் இது 7.7 விழுக்காடாக இருந்தது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது.

உயர்நிலை 1 மாணவிகளில் 90%க்கும் அதிகமானோருக்கு 'எச்பிவி' தடுப்பூசி

உயர்நிலை 1ல் பயிலும் மாணவியர் தொகுதியில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 'எச்பிவி' (human papillomavirus) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பள்ளி சுகாதாரத் தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2019ல் மாணவிகளுக்கு 'எச்பிவி' தடுப்பூசியைப் பள்ளிகள் வழங்கத் தொடங்கின. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதே அதன் நோக்கம்.

2018 ஜனவரிக்கும் 2021 டிசம்பருக்கும் இடையே, 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 105,000க்கும் அதிகமான மாதர்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைக்குச் சென்றதாக அமைச்சு தெரிவித்தது.