ஆ. விஷ்ணு வர்தினி
தேசிய நூலக வாரியத்தின் மத்திய பொது நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவல்பெற இனி தானியக்க இயந்திரத்தைப் பயன்படுத்த அவசியமில்லை; புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு நின்றாலே போதும்.
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட 'கிரேப்-அன்-கோ' என்ற புதிய சேவை இதனைச் சாத்தியமாக்கும்.
விக்டோரியா ஸ்ட்ரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள 'ஸ்டடி லவுஞ்ச்', மாணவர்கள் படிப்பதற்கு மட்டுமின்றி, 18 வயதுக்கு மேற்பட்டோர் புத்தகங்களை இப்புதிய சேவையின்வழி இரவல் பெறுவதற்காகவும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நான்கு எளிய நடைமுறைகளில் நாம் புத்தகங்களை இரவல் பெற்றுக்கொள்ளலாம். அடையாள அட்டையையோ தேசிய நூலக வாரிய மின்-அட்டையையோ வருடி 'ஸ்டடி லவுஞ்சிற்குள்' நுழையலாம்.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளிலும் பெரியோர் அதிகம் வாசிக்கும் 5,000 புத்தகங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
அதிகபட்சம் எட்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், மின் கதவுகளுக்கு அருகே நிற்கும்போது, நம் கையில் உள்ள புத்தகங்கள் அடையாளம் காணப்படும்.
கண்டறியப்பட்ட நூல்களின் இரவலை உறுதி செய்ய, நமது அடையாள அட்டையை மீண்டும் வருடினாலே போதுமானது.
நூலக அபராதம் செலுத்தவேண்டியோர், நூல்களைத் தேதி கடந்து திரும்பத் தராமல் இருப்போர், எட்டுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஏந்தி இருப்போர் ஆகியோர் புத்தகங்களோடு மின் கதவுகளைத் தாண்டி செல்ல இயலாது. அதற்கான எச்சரிக்கையையும் வருடும் இயந்திரம் வாசகர்களுக்கு வழங்கும்.
"வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க இத்திட்டம் முயல்கிறது. நேரத்தை மிச்சமாக்கி, சிக்கலற்ற ஓர் அனுபவமாக இனி நூல் இரவல் பெறுவது அமையும் என்பது எங்களது நம்பிக்கை," என்றார் நூலக அதிகாரி ரேணு சிவா.
அடுத்த மாதம் 13ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு வரை சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய பொது நூலகம் தற்காலிகமாக மூடப்படவிருப்பதால், இடைப்பட்ட காலத்தில் இந்தப் புதிய முயற்சி புத்தக இரவலை எளிதாக்கும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
'ஆர்எஃப்ஐடி' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் 'கிரேப்-அன்-கோ' திட்டத்தை அடுத்த ஆண்டு மற்ற பொது நூலகங்களிலும் அமல்படுத்த தேசிய நூலக வாரியம் திட்டமிடுகிறது.
அதன் 'லேப்25' என்ற திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல நவீன முயற்சிகளில் 'கிரேப்-அன்-கோ' திட்டமும் அடங்கும்.

