மதியிறுக்கம் உள்ளோருக்கான நிலையங்களில் நீண்ட காத்திருப்பு
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களில் இடம் கிடைக்க ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்வரை காத்திருக்க நேர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய நிதி இல்லாமை, ஊழியர் பற்றாக்குறை ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
மதியிறுக்க பாதிப்பு உள்ளோர், சிறப்புத் தேவை உடையோருக்கான பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறிய பின்னர், தங்களைப் போன்றோரிடம் தொடர்புகொள்ளவும் முக்கியமான தொடர்புத் திறன்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருகின்றன இத்தகைய பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள்.
சிங்கப்பூரில் சமூக சேவை அமைப்புகள் ஆறு பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களை நடத்திவருகின்றன. மொத்தம் 300 பேருக்கு இவை சேவை வழங்க முடியும். இடம் கிடைக்காமல் சிரமப்படும் குடும்பங்களின் துன்பத்தைத் தீர்க்க முனைந்துள்ளது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு. கூடுதல் நிலையங்களை அமைப்பதும் நிதிப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண்பதும் இவற்றில் அடங்கும்.
மூன்றில் ஒரு சிங்கப்பூர் ஊழியர் வேலை மாற விருப்பம்: ஆய்வு
ஆட்சேர்ப்பு நிறுவனமான 'ராண்ட்ஸ்டாட்' இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய கருத்தாய்வில் 31 விழுக்காட்டு ஊழியர்கள் இந்த ஆண்டின் முற்பாதிக்குள் வேலை மாறத் திட்டமிடுவதாகத் தெரிவித்தனர்.
2021ல் இவ்வாறு விருப்பம் தெரிவித்தவர்களைவிட இது ஐந்து விழுக்காடு அதிகம். வேலைச் சந்தை தொடர்ந்து மீட்சியடைவது இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
வேலைதேடுவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் காலியான வேலைகளின் எண்ணிக்கை அதிகமாகும் நிலை, ஊழியர்கள் பலரையும் மேம்பட்ட வேலை வாய்ப்புகளை நாடத் தூண்டுவதாக 'ராண்ட்ஸ்டாட்' நிறுவனம் கூறியது.
கூடுதல் சம்பளம் மட்டுமின்றி முழுமையான வேலை அனுபவத்தை ஊழியர்கள் நாடுகின்றனர். நீக்குப்போக்கான வேலை நேரம், தொழிலில் வளர்ச்சி காண உதவும் வேலைச்சூழல் போன்றவற்றை அவர்கள் விரும்புகின்றனர் என்று அது குறிப்பிட்டது. கருத்தாய்வில் சிங்கப்பூரில் வேலை செய்யும் 2,705 பேர் கலந்துகொண்டனர்.
காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றிய மாதுக்கு சிறைத்தண்டனை
நிதித்துறை மேலாளருடன் கூட்டுச் சதி செய்து 'மனுலைஃப்' காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்ற முயன்ற மாதுக்கு நேற்று இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு சில்வெர் ஹுவாங் சின் டியனுடன் சேர்ந்து குற்றம் செய்ததை 40 வயது பெட்ரிஷா குவெக் புவே இ ஒப்புக்கொண்டார்.
ஜூன் 2020ல் குவெக்கின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் ஜூலை மாதம் அவ்வாறு நேர்ந்ததாக 'மனுலைஃப்' காப்புறுதி பெற இரு பெண்களும் சதிசெய்தனர்.
ஆனால் மருத்துவமனையிடம் தகவலைச் சரிபார்த்த காப்புறுதி நிறுவனம் குவெக்கின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
பின்னர் இதுகுறித்துக் காவல்துறைக்கும் அது தகவல் அளித்ததாகக் கூறப்பட்டது.

