சிங்கப்பூருக்கும் பசிபிக் கூட்டணி என்றறியப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளான சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகியவற்றுக்கும் இடையிலான பொருளியல் உறவுகளை வலுப்படுத்தும் உடன்படிக்கை நேற்று கையெழுத்தாகியுள்ளது.
'மெக்சிகோவில் ஒத்துழைப்புக்கான பிஏ-சிங்கப்பூர் கூட்டுப் பணித் திட்டம்' எனும் உடன்பாட்டில், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டானும் மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்டும் கையெழுத்திட்டனர்.
மின்னிலக்கப் பொருளியல், நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கக் கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட தொழில்நுட்பமும் புத்தாக்கமும், பசுமை எரிசக்தியும் நீடித்த நிலைத்தன்மையும், தொடர்பு, தளவாடம், நிறுவனத் தொடர்பு போன்றவற்றில் இருதரப்பும் ஒத்துழைக்க இது வகைசெய்கிறது.
சிங்கப்பூருக்கும் பசிபிக் கூட்டணி நாடுகளுக்கும் இடையில் நீண்டகால அடிப்படையில் வலுவான தொடர்புகளை மேம்படுத்த இது உதவும் என்று சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
சுழற்சி முறையில் பசிபிக் கூட்டணிக்குத் தற்போது தலைமையேற்றுள்ளது மெக்சிகோ. உலகளவில் ஆகப் பெரிய பொருளியல்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்தக் கூட்டணி. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு டிரில்லியன் டாலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான சிங்கப்பூரின் மொத்த வர்த்தக, முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கூட்டணி நாடுகளுடனானது என்று சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு குறிப்பிட்டது.
வர்த்தகம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்த பசிபிக் கூட்டணி நாடுகளில் அமைந்துள்ளன.
துணையமைச்சர் டான் தமது மெக்சிகோ பயணத்தில் அந்நாட்டு அமைச்சர்கள், செனட் தலைவர்கள், வர்த்தகர்கள், அங்குள்ள சிங்கப்பூர் நிறுவன ஊழியர்கள் போன்றோரைச் சந்தித்தார்.

